×

போர்க்கப்பல் பழுதுபார்க்கும் மையமாக காட்டுப்பள்ளி துறைமுகம் மாறும்: அதிகாரிகள் தகவல்

சென்னை:சென்னை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில், ‘எல் அன் டி’ கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘சார்லஸ் ட்ரூ’ என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கடந்த மார்ச் 11ம் தேதி மாலை அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது. அந்த கப்பல் பழுதுபார்க்கப்பட்டு மார்ச் 29ம் தேதி புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், அமெரிக்க கடற்கடை மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன் டி இடையே கடந்த மாதம் கையெழுத்தான 5 மாஸ்டர் ஷிப்யார்ட் பழுதுபார்க்கும் ஒப்பந்தத்தின்படி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் பழுது பார்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா கடற்படையின் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் யுஎஸ்என்எஸ் சால்வார் கப்பல் பழுதுபார்ப்பதற்காக காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று வந்தது. கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த அமெரிக்க கப்பல் பழுதுபார்க்கப்படும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் காலங்களில் அமெரிக்க கப்பல்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வரக்கூடும். மேலும் பிற வேலைகளுக்காகவும் அமெரிக்க கப்பல்கள் வரும் என தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள கப்பல் கட்டும் தளங்களை அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு பயன்படுத்துவதை அமெரிக்கா பார்க்கிறதா என்பது குறித்தும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்ற துறைமுகங்களிலும் அந்த துறையின் நிலையை பூர்த்தி செய்ய முடியும். வரும் காலங்களில் போர்க்கப்பல் பழுதுபார்க்கும் மையமாக காட்டுப்பள்ளி துறைமுகம் மாறும் என்றார். மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஜூடித் ரவின் கூறுகையில், எம்எஸ்ஆர்ஏ என்பது அமெரிக்க கடற்படை மற்றும் தனியார் கப்பல் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே, அமெரிக்க கடற்படை கப்பல்களை பழுதுபார்ப்பதற்கு கப்பல் கட்டும் தளங்களுக்கு முன் அனுமதி வழங்க சட்டரீதியாக கட்டுப்பாடற்ற ஏற்பாடாகும்’ என்றார்.

The post போர்க்கப்பல் பழுதுபார்க்கும் மையமாக காட்டுப்பள்ளி துறைமுகம் மாறும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kattupally port ,CHENNAI ,L&D ,Indian Coast Guard… ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு