×

கூடுவாஞ்சேரியில் அரசு டாக்டரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் அதிரடி நடவடிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் அரசு டாக்டரை மிரட்டி ரூ.12 லட்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி உட்பட 4 பெண் போலீசார், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட படப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டீ கடையில் தகராறில் ஈடுபட்ட புகாரின்பேரில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து சோமங்கலம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகிதா அன்னகிருஷ்டியை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கடந்த 3ம்தேதி உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய புதிய இன்ஸ்பெக்டராக மகிதா அன்னகிருஷ்டி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித் (27) என்பவரை கடந்த 4ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டி சிறையில் அடைத்தார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த பள்ளி மாணவியை கருக்கலைப்பு செய்ததாக கூறி, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வசிக்கும் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவரை மிரட்டி, இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டி வக்கீல் ஒருவருடன் சேர்ந்து ரூ.12 லட்சம் பறித்துள்ளார். இந்நிலையில், அரசு டாக்டர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஆதாரப்பூர்வமாக நேற்று காலை புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டியை சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு அதிரடியாக உத்தரவிட்டார். கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கூடுவாஞ்சேரியில் அரசு டாக்டரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Guduvancheri ,Goduvancheri ,Gov. ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...