×

ஆலம்பாடி மாடுகளை மீட்டெடுக்க 31 ஏக்கரில் ஆராய்ச்சி மையம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஆலம்பாடி. இந்த ஊரில் தோன்றிய மாட்டினமே ஆலம்பாடி நாட்டு மாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த இன மாடுகள் வண்டி இழுப்பதற்கும், விவசாய உழவுப் பணிகளுக்கும் தோதாக பயன்படுகின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய ஆலம்பாடி மாடுகள், நீண்ட கால்களையும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த கொம்பையும் கொண்டிருக்கும். இந்த மாட்டினங்களுக்கு குறைந்த அளவு தீவனமே போதுமானது. பராமரிப்பு செலவும் குறைவு. இந்த மாடுகள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இது தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரத்தைச் சுற்றியுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் மட்டுமே உள்ளது.

ஆலம்பாடி நாட்டு மாடுகள் குறித்து தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சிப் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் பயனாக ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி நிலையத்தை, தர்மபுரியில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ₹4 கோடி மதிப்பீட்டில் இதனை தொடங்குவதற்கான அனுமதியும், நிதியும் கோரி, கடந்த 2018ம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆலம்பாடி பசுக்களைக் காக்கவும், இன விருத்தி, உறைவிந்து மூலம் சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையமானது காரிமங்கலம் அருகேயுள்ள பல்லேனஅள்ளி கிராமத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தினசரி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். அவர்கள் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து பயிற்சியும் பெற்று செல்கின்றனர். அதோடு கால்நடை தீவன வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்து செல்வது கவனம் ஈர்த்து வருகிறது.

‘‘உலகத்திலேயே நாட்டு இன மாடுகளை பாதுகாத்து, வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தமிழர்கள்தான். ஜல்லிக்கட்டினால் நாட்டு இன மாடுகள் மீட்டெடுத்து பாதுகாக்கப்பட்டன. இயந்திரங்கள் இல்லாத காலத்தில் நாட்டு இன மாடுகளைக் கொண்டே உழவு ஓட்டுதல், போர் அடித்தல் உள்ளிட்ட விவசாயப்பணிகள் நடந்தது. விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் புகுந்த பின்னர் மாடுகளைப் பயன்படுத்துவது குறைந்தது. இடையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை போன்ற காரணங்களால் வீடுகளில் நாட்டு மாடுகள் வளர்ப்பதும் குறைந்தது. இதனால் நாட்டு இன மாடுகள் இனம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதில் ஆலம்பாடி நாட்டு இன மாடு அழிவின் விளிம்புக்கு சென்றது.
இந்த மாடுகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது.

பல்வேறு விதமான நாட்டு இன காளைகள் பங்கேற்கின்றன. இதன் மூலமாகவும் ஆலம்பாடி மாட்டினம் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் பங்கேற்றன. இதில் ஆலம்பாடி மாட்டினத்தைச் சேர்ந்த ரத்தக்காட்டேரி என்று அழைக்கப்படும், தர்மபுரி மாடுதான் முதல் பரிசு பெற்றது. ஆலம்பாடி மாட்டின காளைகள் விறைப்பாகவும், முறைப்பாகவும் காணப்படும். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் மூலம், அழிவின் விழிம்பில் இருந்து அவை காக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் தர்மபுரி மாவட்ட அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் தாபா சிவா.

‘‘அழிவின் விளிம்பில் உள்ள தமிழ்நாட்டு இன ஆலம்பாடி மாட்டினத்தை மீட்டெடுக்கவே, அரசு இந்த ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. ஆலம்பாடி இன மாடுகளை இனவிருத்தி செய்து, நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளிடமே ஆலம்பாடி இனமாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் முடித்து, 2 ஆண்டுகளாக முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் மாதிரி பண்ணைகளாக மாற்ற உள்ளோம். கால்நடை வளர்ப்பு குறித்து ஆலோசனையும், பசுந்தீவன வளர்ப்பு ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கறவைமாடு பண்ணை பராமரிப்பு குறித்தும் விவசாயிகள் கேட்டறிந்து செல்கின்றனர்’’ என்கிறார் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் வசந்தகுமார்.

தொடர்புக்கு
டாக்டர் வசந்தகுமார் – 94437 79898

வளாகத்தில் பசுந்தீவனம்

இந்த ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், நிரந்திர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 15 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆலம்பாடி நாட்டு இனங்களில் தற்போது, 35 கறவை மாடுகள் இந்த மையத்தில் உள்ளன. இதில் சமீபத்தில் ஒரு மாடு 6 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த மாடுகளையும், கன்று குட்டிகளையும் பராமரித்து வருகின்றனர். மாட்டுத்தொழுவமானது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மைய வளாகத்தில் பசுந்தீவனம் வளர்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

The post ஆலம்பாடி மாடுகளை மீட்டெடுக்க 31 ஏக்கரில் ஆராய்ச்சி மையம் appeared first on Dinakaran.

Tags : Village Alambati ,Tamil Nadu-Karnataka ,Darmapuri District Ogenakal ,Alambadi ,
× RELATED திம்பம் சீவக்காய் பள்ளம் அருகே யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி