×

வெற்றியைத் தீர்மானியுங்கள்

நம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று என்கிறார் ஹெலன் கெல்லர்.வாழ்க்கை என்பது நம்பிக்கையால் மட்டுமே உயர்வு பெறுகிறது.நாம் உயிர் வாழ்வது காற்றைச் சுவாசிப்பதால் மட்டுமல்ல, நம்பிக்கையை சுவாசிப்பதாலும்தான்ஆகவே எத்தகைய சூழலிலும் நம்பிக்கையைத் தளரவிட வேண்டாம். எதுவும் நல்லதற்கே என்றும்,என்னால் முடியும் என்ற எண்ணமும், எப்பொழுதும் உங்கள் உள்ளத்தில் ஊடுருவிப் பாயட்டும். எடுத்த காரியம் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவேன் என்று நம்புங்கள். நம்பிக்கை தான் உங்களுடைய சிந்தனைகளுக்கு வலு சேர்க்கிறது. நம்பிக்கை இருந்தால் மலையையும் நகர்த்தலாம் என்பார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தவர் அவனி லேகரா. இந்த பெண்மணிதான் இந்தியாவின் தங்கமங்கை.ஒவ்வொரு சாதனையும் ஒரு மறக்க முடியாத இழப்புக்கு பிறகுதான் தொடங்குகிறது, அப்படித்தான் இந்த பெண்ணுக்கும் நிகழ்ந்தது.

அவனிக்கு 11 வயதிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கார் விபத்து ஒன்று ஏற்படுகிறது. இந்த விபத்தில் அவனியின் முதுகெலும்பில் பலமாக அடிபட்டுவிடுகிறது.அதுமட்டுமல்ல ஓடி, ஆடி விளையாடிய அவனி 11 வயதிலேயே வீல்சேரில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. துறுதுறுவென்று விளையாடிக் கொண்டிருந்த பெண் வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்தால் அந்த பொண்ணின் மனது எந்தளவுக்கு வலியை அனுபவிக்கும் என்பதை அவரைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த விபத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதம் அவனி படுத்த படுக்கையில் இருந்துள்ளார். இருந்தபோதும் மனம் தளரவில்லை,இந்த உலகில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் புத்தகம் வாயிலாகபடிக்கத் துவங்கியிருக்கிறார்.

அப்போதுதான் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வாங்கிய அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அதன் பின்,அவனிக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்,வென்றால் மட்டும் போதாது,அபினவ் பிந்த்ரா போன்று சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரு புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.அதன் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு சென்று வீல் சேரில் அமர்ந்தபடி பயிற்சி எடுத்துக்கொள்கிறார்.மகளின் வளர்ச்சிக்கு அவனியின் தந்தைதான் முதல் விதை போட்டார். அவனியின் தந்தை அவனியை வில்வித்தை பயிற்சியில் சேர்க்க நினைத்தார். ஆனால் அப்பாவின் ஆசையைக் காட்டிலும் இரட்டை மடங்கு ஆசையாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியைத் தேர்வு செய்தார் அவனி. அவரின் ஆழ்மனதில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி இருந்தது. அதனால் தனக்கு ஏற்பட்ட இலக்கை கனவாக மாற்றிக்கொண்டார். வீல் சேரில் இருந்தபடி துப்பாக்கிசுடும் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தினார்.

அவனி தன் 14வது வயதில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று இளம் வயதிலே தங்கப்பதக்கத்தை ஜெயித்து அசத்தினார்.அந்தத் தங்கம்தான் அவரை ஒலிம்பிக் வரை கொண்டுசெல்ல முதல்படியாக அமைந்தது.அடுத்த நான்கு வருடங்களில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி ஐந்து தங்கப்பதக்கங்களை அடுத்தடுத்து வென்றார். பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் உலக கோப்பையிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்படி எங்கு சென்றாலும் தங்கம்,வெள்ளி என்று ஜெயித்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு அவனிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பும் கிடைத்தது.

அந்த போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அது மட்டுமல்ல பாராஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற தவிர்க்க முடியாத சாதனையையும் நிகழ்த்தி 19 வயதிலே சாதித்தார். அதே ஒலிம்பிக்கில் மற்றொரு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். ஒரே பாராஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வாங்கிய முதல் இந்தியப்பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்அவனி. அவனியின் சாதனை ஒட்டுமொத்த செய்திதாள்களிலும் செய்தியாக வெளிவந்தது. இவரை பாராட்டும்விதமாக இந்திய அரசு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கெய்ல் ரத்னா விருது கொடுத்து அவனியை கௌரவித்தது. மேலும் 2022ல் பாரத் ரத்னா விருதும் கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியும், பாராட்டும் அவனிக்கு எளிதாக கிடைக்கவில்லை. விபத்துக்கு பின் ஒவ்வொரு நாளும் உடல்அளவிலும்,மனதளவிலும் மிகுந்தபாதிப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை, மீண்டும் தளராத தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துகொண்டார். என்னதான் ஒரு பக்கம் விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சாதனைகள் புரிந்தாலும் கல்வியையும் ஒரு பக்கம் விடாமல் அதிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவனி.

தற்சமயம் இராஜஸ்தானில் சட்டம் பயின்று வருகிறார். ஆனால் இவரைப்போல வேறு யாருக்காவது இப்படி நடந்து இருந்தால் மூலையில் முடங்கி இருப்பார்கள். அவனி தனக்கு நேர்ந்த விபத்தை நினைத்து நொறுங்கிவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு துப்பாக்கிசுடும் போட்டிகளில் தொடர்பயிற்சி எடுத்துக்கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மகத்தான வெற்றியாக மாற்றிக் கொண்டார். சமீபத்தில் மே மாதம் 24ம் தேதி கொரியாவில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் கூட வெள்ளிப் பதக்கத்தை வென்று திரும்பியுள்ளார் அவனி. எத்தனை துயரங்கள் வந்தாலும் மனதளவில் மாறவேண்டும் என்று தீர்க்கமான முடிவு எடுத்தால் மட்டுமே நம்முள் மாற்றத்தை காணமுடியும் என்பது தான் அவனி லேகராவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இவரைப்போலவே ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கையுடன் வெற்றியைத் தீர்மானியுங்கள், வெற்றியை வசப்படுத்திக் கொள்ளுங்கள்.
பேராசிரியர்: அ.முகமது அப்துல்காதர்

The post வெற்றியைத் தீர்மானியுங்கள் appeared first on Dinakaran.

Tags : Helen Keller ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்...