×

வேலூர் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடபட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

வேலூர்: காட்பாடியில் தனியார் உணவகம் ஒன்றில், மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஒரு சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் முக்கிய சாலையான வேலூர் காட்பாடி சாலையில் சித்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 9.7.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புதியதாக திறப்பு விழா கண்ட ஒரு தனியார் உணவகத்தில் வழக்கத்திற்கு மாறாகவும் அளவிற்கு அதிகமாகவும் பொதுமக்கள் கூட்டம் காலை 9 மணி முதல் சாலைகளில் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது.

இது தொடர்பாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் காட்பாடி வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் இச்சம்பவத்தை கண்காணித்து வந்தனர்.

தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த தனியார் உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் நீண்ட நேரம் எவ்வித பாதுகாப்புமின்றி பொதுமக்கள் வெயிலில் இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும். என்ற வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்ததனடிப்படையில் காட்பாடி பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அலுவலகத்திற்கு திரும்பி கொண்டு இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த கூட்டத்தை பார்த்து வாகனத்தை நிறுத்தி உடனடியாக அவ்விடத்திற்கு சென்று ஏன் இவ்வளவு கூட்டம் எதற்காக நிற்கிறது என உணவாக உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சம்மந்தபட்ட தனியார் உணவகம் அன்று புதியதாக திறப்பு விழா கண்டுள்ளதாகவும், திறப்பு விழா நாளான அன்று ஒரு நாள் ஒரு பிரியானி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்போடு அந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. இதன் காரணமாக பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடி இருந்தனர்.

தனியார் உணவகத்தின் சார்பில் எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடு வசதிகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காட்பாடி வேலூர் இணைக்கும் முக்கிய சாலையான அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் காலை நேரத்தில் அதிக வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் அல்லது அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவ்வாறான அசம்பாவிதம் ஏதும் ஏற்படா வண்ணம் இருக்க அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடவும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும்பொழுது அதற்கான தகுந்த ஏற்பாடுகளை செய்து பின்னர் உணவகத்தை திறக்கும் படியும் தனியார் உணவக நிர்வாகத்திற்கு நேரடியாக அறிவுரை வழங்கப்பட்டது.

பின்னர் அந்த உணவகத்தின் உரிமம் மற்றும் இதர விதிமுறைகள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தனியார் உணங்க நிர்வாகத்தின் சார்பில் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே உணவகம் திறக்கப்பட்டது.

மக்களின் பாதுகாப்பு கருதியும். நுகர்வோர் நலன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கருதியும் எடுக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒரு சிலர் இந்த உணவக பிரச்சனையை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post வேலூர் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடபட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vellore Kadbadi ,Vellore ,Catapadi ,Catepadi ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...