×

ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு.. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு!!

டெல்லி : தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்று, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட ஓ.பி.ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் பி.மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தது. ஆனால், தேனி தொகுதியின் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்,ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் என்று கடந்த 2019 மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்டார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தங்க தமிழ்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு.. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு!! appeared first on Dinakaran.

Tags : O.O. ,GP ,Rabindra Nath Appeals ,Delhi ,Theni ,O.M. GP ,Chennai High Court ,Rabindra Nath ,O. GP ,Rabindra Nath Appeals Caviet ,Dinakaran ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி