- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- தலைமை நீதிபதி
- சந்திராச்சூட்
புதுடெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் முறையாக 2019 டிசம்பரில் நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கை மாற்றுமாறு மனுதாரர்கள் முறையிட்டனர்.
ஆனால் 2020 மார்ச்சில் வழங்கப்பட்ட உத்தரவில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே வழக்கு நடைபெறும் என என்.வி ரமணா அறிவித்தார். அதன் பிறகு என்.வி ரமணா, யு.யு லலித் ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக பதவியேற்று ஓய்வும் பெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட படாமலேயே இருந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பிறகு இந்த மனு இன்று விசாரிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மனு மீதான விசாரணையை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
The post ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.