×

இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் : 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை.. 72 பேர் உயிரிழப்பு.. 2 வாரங்களில் ரூ. 3,000 கோடி இழப்பு!!

புதுடெல்லி: 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் இமாச்சலபிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என திரும்பும் திசையெல்லாம் இயற்கையின் கோர தாண்டவமாக உள்ளது. அங்கு சுற்றுலா நகரமான மணாலியில் வெள்ளத்தில் சிக்கிய 20 பயணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்ட நிலையில், மேலும் 400 பேர் பல பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

கனமழை வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல கார்கள் ஆற்றில் காகித படகு போல மிதக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே நேற்றும் இமாச்சலில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 2 வாரங்களில் 39 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 29 இடங்களில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளம், நிலச்சரிவு, வீடுகள் இடிந்து 2 வாரத்தில் 72 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘50 ஆண்டுகளில் இதுபோல் எப்போதும் கனமழை கொட்டியதில்லை. கனமழையின் போது ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். கனமழையால் ரூ.3000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார். பிரதமர் மோடியும், இமாச்சல் முதல்வர் சுக்விந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையம் ஒன்றிய அரசு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

The post இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கையின் கோரத் தாண்டவம் : 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை.. 72 பேர் உயிரிழப்பு.. 2 வாரங்களில் ரூ. 3,000 கோடி இழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,New Delhi ,
× RELATED தலைவிரித்தாடும் தண்ணீர்...