×

குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை வேதாந்தா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாக்ஸ்கான்: ரூ. 1.50 லட்சம் கோடி முதலீடு ரத்து

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் முடிவை பாக்ஸ்கான் நிறுவனம் கைவிட்டுள்ளது. முன்னணி எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் வேதாந்தா குழுமத்துடன் இணைந்து செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது. குஜராத்தில் டோலேரா ரூ.1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துடனான இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

வேதாந்தா – பாக்ஸ்கான் இணைந்து உருவாக்கிய கூட்டணியில் இருந்து தங்களுடைய பெயரை நீக்குவதற்கான பணிகளை செய்துவருவதாக பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை பாக்ஸ்கான் அறிவித்த உடன் முதலில் அணுகியது தமிழ்நாடு அரசு தான். ஆனால் வேதாந்தா நிறுவனம் மூலம் அந்த திட்டம் குஜராத் மாநிலத்திற்கு செல்ல இருந்தது. தற்போது பாக்ஸ்கான் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு திட்டம் ரத்தாகி உள்ளது.

* இந்தியாவுக்கு பாதிப்பில்லை ஒன்றிய அரசு விளக்கம்

வேதாந்தா ஒப்பந்த்தில் இருந்து பாக்ஸ்கான் விலகுவது இந்தியாவின் செமி கண்டக்டர் உற்பத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது,’இரண்டு தனியார் நிறுவனங்கள் ஏன் அல்லது எப்படி பங்குதாரர்களாக தேர்வு செய்கின்றன அல்லது தேர்வு செய்யக்கூடாது என்பதில் அரசிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. ஆனால் இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் சுதந்திரமாக உற்பத்தியை மீண்டும் தனித்தனியாக தொடர முடியும். இருப்பினும் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து இருப்பது மோடி அரசுக்கு அடியாக இருக்கும் என்றால் அது மோசமான கருத்து ஆகும். ஏனெனில் செமிகண்டக்டர் தயாரிப்பில் இப்போது தான் இந்தியா அடியெடுத்து வைத்து இருக்கிறது’ என்றார்.

* பாஜ உருவாக்கும் தலைப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்

பாக்ஸ்கான் வெளியேறும் முடிவை அறிவித்ததை தொடர்ந்து ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘திட்டத்தை அறிவிக்கும் போது நடந்த விளம்பரத்தை நினைவில் கொள்கிறீர்களா? குஜராத் முதல்வர் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூட கூறினார்! அவர்கள் செய்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி இதுதான்.

குஜராத் மாடலோ அல்லது புதிய இந்தியாவோ பாஜவால் உருவாக்கப்பட்ட தலைப்புச் செய்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மிலிந்த் தியோரா ஒரு டிவீட்டில், ‘‘இந்தியாவின் சிப்மேக்கிங் திட்டங்களுக்கு மோசமான செய்தி. முதலில் மகாராஷ்டிராவில் இருந்து தன்னிச்சையாக மாற்றப்பட்டது. இப்போது இப்போது பாக்ஸ்கான் வெளியேறுகிறது. அனுபவம் வாய்ந்த தொழில்நிறுவனங்களை ஒன்றிய அரசு இணைத்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை வேதாந்தா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாக்ஸ்கான்: ரூ. 1.50 லட்சம் கோடி முதலீடு ரத்து appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Vedanta ,Paxcon ,New Delhi ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில்...