×

பாமக நகர செயலாளர் படுகொலை வழக்கில் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் போலீசார்: கூட்டாளியும் சிக்கினார், கூலிப்படை ஏவி கொன்றது அம்பலம்

சென்னை: செங்கல்பட்டில் பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர் செங்கல்பட்டு நகர பாமக செயலாளர். செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட முயன்றார். அந்த நேரத்தில் பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நாகராஜை வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதை பார்த்த அருகில் இருந்த வியாபாரிகள் கடையை மூடினர்.

அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நாகராஜை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நாகராஜ் இறந்து விட்டதாக கூறினர். இந்த தகவலை கேள்விப்பட்டதும் மருத்துவமனை முன்பு ஏராளமான பாமகவினர் குவிந்தனர். இதற்கிடையில், நாகராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள், பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நேரத்தில், போராட்டக்காரர்கள், செங்கல்பட்டு- திருச்சி ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம், ‘‘குற்றவாளிகளை விரைந்து கைது செய்கிறோம்’’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதில், செங்கல்பட்டு கே.கே. தெரு பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

அவரது செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது, செங்கல்பட்டு புறவழி சாலையை காட்டியது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, செங்கல்பட்டு அருகே அஞ்சூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது. அவர்களை பின்தொடர்ந்த போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காலில் காயம் அடைந்த அஜய்யை மடக்கிப் பிடித்தனர். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போலீசார் செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில், மற்றொரு கொலையாளியான கார்த்திக் (27) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

* கொலைக்கு காரணம் என்ன?
நாகராஜின் மகள் சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, சூர்யாவை நாகராஜ் மகள் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக, நாகராஜ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சூர்யா மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த சூர்யா, விடுதலையானதும் கூலிப்படையை ஏவி, நாகராஜை படுகொலை செய்தது தெரிய வந்தது.

The post பாமக நகர செயலாளர் படுகொலை வழக்கில் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் போலீசார்: கூட்டாளியும் சிக்கினார், கூலிப்படை ஏவி கொன்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Pamaga ,Ambalam ,CHENNAI ,Bamaka ,Chengalpattal ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம்...