×

ரூ.6000 கோடி மோசடி விவகாரம் பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜா கைது: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசை காட்டி ரூ. 6,000 கோடி மோசடி செய்த பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜா கைது செய்யப்பட்டார். திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதத்தில் இரண்டு மடங்காக திருப்பி தருவதாக விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது. அந்த வகையில் சுமார் 7000 பேரிடம் ரூ.6000 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜா (எ) அழகிரிசாமி கடந்த 2020ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மோசடி விவகாரம் பூதாகரமாக மாறியதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பான புகார்களின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவினர் நிதி நிறுவன உரிமையாளர்கள் ராஜா (எ) அழகர்சாமி, ரமேஷ் உள்ளிட்ட பலர் மீது பல வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். இதில் சில வழக்குகளில் ஜாமீன் பெற்றனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ராஜா (எ) அழகர்சாமி உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதனால், ராஜா உள்ளிட்டோருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நிதி மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் ராஜா (எ) அழகர்சாமியை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஜோதி முன் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 257 சொத்துக்கள் முடக்கப்பட்டு, 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணத்தை இழந்தவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று திருச்சி போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.6000 கோடி மோசடி விவகாரம் பாஜ மாஜி நிர்வாகி எல்பின் ராஜா கைது: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Baja Maji ,executive ,Elbin Raja ,Elbin ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல்...