×

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு ரவுடியிடம் மீண்டும் விசாரணை

திருச்சி: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடியிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சி பிரபல தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் திருச்சியில் மர்ம நபர்களால் கடத்திச் சென்று கடந்த 2012 மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் குமார், திருச்சி சாமி ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன், கடலூர் சிறையில் இருக்கும் செந்தில் குமார் ஆகிய, 13 பேரிடமும் விசாரணை நடத்தி, அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டது. இவர்களில், குடவாசலை சேர்ந்த தென்கோவன் தவிர மற்ற 12 பேருக்கும் ‘பாலிகிராப்’ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடைபெற்றது.

இதன்மூலமும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில் இவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவெடுத்து முதற்கட்டமாக, திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ் குமாரை மீண்டும் அழைத்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு ரவுடியிடம் மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Trichy Ramjayam ,Raudi ,Trichy ,Roudi ,Trichy Ramazeam ,Rudi ,
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...