×

அகோரி பயிற்சி பெற்றதாக அடையாள அட்டை காட்டி 10 கொலைகள் செய்த குற்றவாளி சீடர்களுடன் சாமியாராக வலம்: குமாரபாளையத்தில் போலீசாரிடம் சிக்கினார்

குமாரபாளையம்: பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய, பலே குற்றவாளி சாமியார் வேடத்தில் சீடர்களுடன் சுற்றி வந்தபோது குமாரபாளையத்தில் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காவி உடையில் சாமியார் போன்ற தோற்றத்தில் ஒருவர் 2 சீடர்களுடன், வழியில் உள்ள கடைகளில் புகுந்து அங்குள்ளவர்களுக்கு திருநீரு பூசி வந்துள்ளார். இந்த மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை தடுத்து விசாரித்தனர்.

இதில் சாமியார் தோற்றத்திலிருந்த நபர், தனது பெயர் ஜிக்லினத் அகோரி என்று கூறி, காசியில் உள்ள அகோரியிடம் பயிற்சி பெற்றதற்கான அடையாள அட்டையை கொடுத்துள்ளார். இருந்த போதிலும் போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் சாமியார் வேடத்தில் இருந்தவர், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா என்கிற முகமது ஜிகாத்(36) என்றும், இவர் மீது சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, திருப்பூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் 10 கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கொலை வழக்குகளில் போலீசார் தேடி வந்ததையடுத்து, காசியில் சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததும், அதன்பின்னர் அகோரி என்ற பெயரில் போலி சாமியாராகி, அங்கிருந்து திருச்சியை சேர்ந்த பெண் கலைமணி (45), கடலூரை சேர்ந்த சீனிவாசன் (35) ஆகியோரை தனது சீடர்களாக்கி, தமிழ்நாட்டில் பல இடங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போலி சாமியாரை கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, போலி சாமியாரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

The post அகோரி பயிற்சி பெற்றதாக அடையாள அட்டை காட்டி 10 கொலைகள் செய்த குற்றவாளி சீடர்களுடன் சாமியாராக வலம்: குமாரபாளையத்தில் போலீசாரிடம் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Agori ,Kumarapalayam ,Bale ,
× RELATED மது விற்ற 5 பேர் கைது