×

தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சேலம்: தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் புதிய மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.400 கோடி தேவைப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கலைஞரின் இலக்கு. இதனை 2011ம் ஆண்டே சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் ஒன்றிய அரசு இப்போதுதான் இந்த இலக்கை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்ற நிலை உள்ளது. முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். விரைவில் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும்.

இவை தொடங்கப்பட்டால், இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடையும். தமிழ்நாட்டில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு பாதிப்பால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்பை கண்டறிய முடியும். இன்னும் 15 நாட்களில் 1021 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். தொடர்ந்து, எம்பிபிஎஸ் முடித்த 104 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

The post தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : college ,Tenkasi ,Minister ,Ma. ,Salem ,South Kasi ,Health Minister ,Ma.J. Suparamanian ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...