×

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யக் கூடாது: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாள்வது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
சிதம்பரத்தில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டியது தொடர்பான வழக்கு மற்றும் தர்மபுரியில் நடந்த இளவயது திருமணம் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என்று காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து, தர்மபுரி இளவயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்கு உட்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அப்போது, சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சமூக பாதுகாப்பு துணை இயக்குநர், டி.எம்.எஸ். இணை இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: சிதம்பரம் வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட பெண் மற்றும் வாலிபரிடம் கடலூர் மாஜிஸ்திரேட் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரும் குற்றம் செய்யவில்லை என்று அறிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, சிதம்பரம் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

தர்மபுரி வழக்கை பொறுத்தவரை 18 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண்ணும், இளைஞரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஒரு கோயிலில் தாலி கட்டிய பின்னர் சென்னை வந்து ஆவடியில் ஒரு மாதம் தங்கியுள்ளனர். இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இருவரும் பின்னர் மீட்கப்பட்டனர். இளம்பெண் அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அதிகாரியின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் இருவர் இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இளம்பெண்ணை பென்னாகரம் மாவட்ட முன்சீப் முன்பு ஆஜர்படுத்தியபோது இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தில் இளைஞரிடம் இளம்பெண்தான் கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வௌியேற கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருவரும் 17 வயத்துக்கு குறைந்த குழந்தைகள்தான். ஆனால், இந்த வழக்கில் இளம்பெண் பாதிக்கப்பட்டவராகவும், இளைஞர் குற்றவாளியாகவும் பாவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க கூடாது. இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும். இருவருமே மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி ெபன்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கூடுதல் டிஜிபி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தொடர்பாக 2010 முதல் 2013 வரை 1728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1274 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளில் இருதரப்பும் சம்மதத்துடன் நடந்த வழக்குகளை பிரித்து அறிக்கையாக தந்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி அந்த வழக்குகளை இந்த நீதிமன்றம் ரத்து செய்ய முடியும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்திலேயே வைத்துள்ளனர்.
அவரின் பெற்றோருடன் அனுப்பவில்லை. இது மனதளவில் இந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில குழந்தைகள் நல குழு மற்றும் சிறார் நீதி வாரியம் ஆகியவை விழிப்புணர்வுணர்வுடன் இருக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யப்படுவதை தவிர்க்கும்படி காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்த வேண்டும். ரத்த பரிசோதனை மூலம் ஆண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதும் இந்த மருத்துவ நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆண்மைத்தன்மை சோதனை செய்வதில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023 ஜனவரி 1 முதல் இதுவரை எத்தனை நிலுவையில் உள்ளன. எத்தனை வழக்குகளில் மருத்துவ அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட விவரங்களுடன் மண்டலம் வாரியாக பட்டியல் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யக் கூடாது: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,High Court ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா...