×

பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை கிடைக்காததால் குடோன்களில் இருப்பு வைக்கப்படும் தேங்காய்கள்: விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

பட்டிவீரன்பட்டி: விலை வீழ்ச்சியால் பட்டிவீரன்பட்டி பகுதியிலுள்ள குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இவைகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தென்னை சாகுபடி மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, கோம்பை, சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர், எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வாழ்வாதரம் தென்னை விவசாயத்தை நம்பியே உள்ளது.

இப்பகுதியில் உள்ள தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு கிடுகு, துடைப்பம், கயறு போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை மரம் ஏறுதல், தென்னந் தோப்பு பராமரிப்பு, தேங்காய் உரித்தல், கயிறு தயாரித்தல் போன்ற பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்யும் குடோன்கள் அதிகளவில் உள்ளன. இங்கு தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உரிக்கப்பட்ட தேங்காய்கள் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய வெளிமாநிலங்களுக்கும், ஈரோடு, திருப்பூர் ஆகிய வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது இப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து ரூ.7க்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் தேங்காய்களை குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை சதமடித்து வருகின்றன. ஆனால், தொடர்ந்து தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் பாராமரிப்பு செலவு தொகை அதிகரித்து வருகிறது. கொப்பரை தேங்காய் விலையும் சரிந்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். தென்னை மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘காங்கேயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகமாக உள்ளதால் காங்கேயம் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தான் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே வாரத்தில் 4 விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், கூடுதலான விலைக்கு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கினால், திடீரென மார்க்கெட் விலை குறைந்து விடுகிறது. நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய்களுக்கு ஒருவிலை நிர்ணயம் செய்தால் அந்த விலை குறைந்தது 15 நாட்களுக்கு மாறாமல் இருந்தால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

மேலும் தேங்காய் மட்டைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 90 பைசா அளவிற்கு விலை போனது. நாளடைவில் விலை சரிந்து தற்போது தென்னை மட்டைகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். விலை சரிவால் விற்பனை ஆகாமல் தேக்கடைந்து வரும் தேங்காய் குவியல்களில் உள்ள தேங்காய்கள் முளைக்க தொடங்கியுள்ளன. தென்னந் தோப்புகளிலிலும் தேங்காய்கள் வாங்க ஆள் இன்றி குவிந்து கிடக்கின்றன’ என்றனர். தேங்காய்களை கொள்முதல் செய்யவும், விலை நிர்ணயம் செய்யவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை கிடைக்காததால் குடோன்களில் இருப்பு வைக்கப்படும் தேங்காய்கள்: விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudons ,Pativieranbati ,Pathivieranbatti ,Pathiviranpatti ,Union State ,Pattivieranpatti ,Dinakaran ,
× RELATED விற்பனைக்கு எடுத்து செல்வதில்...