×

மேற்குவங்க வன்முறையால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு: பதற்றத்துக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை, தீவைப்பு, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களால் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவங்களால் ஆளும் திரிணாமுல் மற்றும் எதிர்கட்சிகளிடையே மோதல் அதிகரித்துள்ளது. ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், தேர்தலில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த நிலையில், மாநில சட்ட ஒழுங்கு விவகாரம் ெதாடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே வன்முறை பாதித்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வன்முறையால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மட்டும் அதிக பட்சமாக 174 வாக்குச் சாவடிகளிலும், மால்டா மாவட்டத்தில் 110 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், மேற்குவங்க வன்முறை குறித்து வெளியிட்ட பதிவில், ‘மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் நடந்த சம்பவங்கள் பயங்கரமானது. இந்த சம்பவங்கள் மன்னிக்க முடியாதவை. மம்தாவின் மன உறுதியை பார்த்து, கடந்த காலங்களில் அவரது ரசிகராக இருந்தேன். ஆனால் இப்போது அங்கு என்ன நடக்கிறது? இடதுசாரிகள் ஆட்சிக் காலத்தில், அவர்களை எதிர்த்து நீங்கள் (மம்தா) தைரியமாக போராடினீர்கள். அப்போது நீங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கொண்டீர்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். ஆனால் இப்போது மேற்குவங்கத்தில் நடப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

The post மேற்குவங்க வன்முறையால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு: பதற்றத்துக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : West ,Kolkata ,Panchayat ,West Bank ,Dinakaran ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...