×

சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-62-க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.07.2023) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த நவீன மீன் அங்காடி கட்டுவதற்கான திட்ட வரைபடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு இப்பணிகளை குறித்த காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இராயபுரம் மண்டலம், வார்டு 62-க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 1,247 ச.மீ. பரப்பளவுள்ள இடத்தில் 1,022 ச.மீ. பரப்பளவில் 102 கடைகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டடமானது கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், மீன் கழிவுநீரினை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115க்குட்பட்ட பீட்டர்ஸ் சாலையில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மழைநீர் வடிகாலானது பீட்டர்ஸ் சாலையில் நியூ காலேஜ் பகுதியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை, மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை 696 மீ. நீளத்திலும், ஆர்.ஓ.பி. 6வது தெருவில் 113 மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டு வரும் விவரத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, இப்பணிகளை தரமாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், (வடக்கு) எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான்(தெற்கு), நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) .நே.சிற்றரசு அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் .எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் ரா. ஜெகதீசன் , வெ. ஈஸ்வரி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : minister ,udayanidhi stalin ,sindatharippe ,Chennai ,Syntharapapetta, Irayapuram Zone ,Udhayanidi Stalin ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்