×

9 மாவட்டங்களை கலக்கிய பிரபல திருடன் கைது: திருநங்கை வேடமிட்டு கைவரிசை காட்டியது அம்பலம்

சேலம்:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவர், கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றார். இதுதொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 8ம் தேதி, ஒதியத்தூர் கேட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபர், போலீசாரை கண்டதும் வேகமாக சென்றார். அவரை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவர் பிரபல திருடன் என்பதும், திருநங்கை வேடமிட்டு பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. நடுவலூரில் ஆசிரியர் அங்கமுத்து வீட்டில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய நகைகளை பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைப்பதற்காக எடுத்துச் சென்றபோது சிக்கிக் கொண்டார்.

விசாரணையில், அவர் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ்(29) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது. பின்னர், வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். வெங்கடேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வெங்கடேசுக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில், இதுவரை 65க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். திருட்டு சம்பவத்தின்போது வெங்கடேஷ் தனது உருவத்தை மாற்றி, திருநங்கை வேடத்தில் கைவரிசை காட்டுவது வழக்கம். திருடப்பட்ட நகைகளை வெவ்வேறு மாவட்டங்களில், தனது மனைவி மற்றும் தங்கை பெயரில் அடகு வைத்துள்ளார். நடுவலூர் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிய நகையில் 4.5 பவுன் நகையை, பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கு அடகு வைத்து, கடந்த ஒரு வார காலமாக ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தான் வெளியே வந்துள்ளார்’ என்றனர்.

The post 9 மாவட்டங்களை கலக்கிய பிரபல திருடன் கைது: திருநங்கை வேடமிட்டு கைவரிசை காட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Salem ,Angamuthu ,Madhulur ,Kengavalli ,
× RELATED திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்