×

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்து ஒரு ஏக்கர் அரசு நிலம் மீட்பு

பொன்னேரி: தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு நீர்நிலைகளில் சாலை அமைத்துள்ளனர். அந்நிலத்தை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சி பகுதியில் உபரிநீர் கால்வாய்க்காக பயன்படும் வகையில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர், நாளடைவில் நீர்நிலை பயன்பாட்டில் இருந்து வந்த சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமித்து, அங்கு சாலை அமைத்தும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவ்வழியே உபரிநீர் வெளியேறுவதில் தடங்கல் ஏற்பட்டு வருவதாக பொன்னேரி வருவாய்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நேற்று மாலை ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். பின்னர் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு நில ஆக்கிரமிப்பில் இருந்த சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி, ஒரு ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின்போது வருவாய்துறை அதிகாரிகளுடன் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) உதயகுமார், பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர் சின்னதுரை, உள்பட பலர் பங்கேற்றனர்.

The post தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்து ஒரு ஏக்கர் அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tadaperumbakkam panchayat ,Ponneri ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!!