×

தாலி எடுத்து கொடுக்கவேண்டிய சித்தப்பா திடீர் கைது: வாலிபர் திருமணம் நிறுத்தம்

* மலைக்கிராமத்தில் நடக்கும் வினோதம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே தாலி எடுத்து கொடுக்கவேண்டிய சித்தப்பா சாராய வழக்கில் திடீர் என கைதானதால் வாலிபர் திருமணம் நின்றது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களில், ஊரான் (நாட்டாண்மை) என ஒருவரை கிராம மக்கள் தேர்வு செய்வார்கள். அந்த ஊரில் திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஊரான் (நாட்டாண்மை) தலைமை தாங்குவார். திருமண விழாவில் ஊரான் தனது கைகளால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த குருமலை கிராமத்தில் சேகர் என்கிற சங்கர்(50) என்பவர் ஊரானாக இருந்து வருகிறார். குருமலை பகுதிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் மலை கிராமத்தில் வசிக்கும் ஊரான் சங்கரின் அண்ணன் மகன் வசந்த். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது திருமணம் நேற்று காலை மணமகன் வசந்த் இல்லத்தில் நடக்க இருந்தது. திருமணத்திற்கு தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக ஊரான் சங்கர், கடந்த 5ம்தேதி உறவினர்களுடன் அணைக்கட்டுக்கு வந்தார். மலை கிராமத்தில் இருந்து சிவநாதபுரம் மலையடிவாரத்திற்கு வந்தபோது அங்கிருந்த எஸ்பி தனிப்படை போலீசார், ஊரான் சங்கரை, சாராய வழக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பின்னர், சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

இதையறிந்த கிராம மக்கள், அரியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, ‘ஊரான் சங்கர், தாலி எடுத்து கொடுத்தால்தான் எங்கள் ஊரில் திருமணம் நடக்கும். தற்போது அவரது சொந்த அண்ணன் மகனுக்கு திருமணம் நடக்க உள்ளது. அவரை திருமணம் நடத்தி வைக்க விடுவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார், ‘வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்க முடியாது’ எனக்கூறினர். இதனை தொடர்ந்து ஊரான் சங்கரை ஜாமீனில் எடுக்க, மலை கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவரான அண்ணாமலை மற்றும் கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சனி, ஞாயிறு உள்ளிட்ட காரணங்களால் சங்கரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை. இதனால் சங்கரின் அண்ணன் மகன் வசந்த்துக்கு நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. குறித்த நேரத்தில் திருமணம் நடக்காததால் மணமக்கள் குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஊரான் சங்கர் ஜாமீனில் வெளியே வந்தபிறகு வேறொரு நாளில் திருமணம் நடத்துவது என மணமக்களின் உறவினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மலை கிராமங்களில் எந்த வீட்டில் திருமணம் நடந்தாலும் அந்த ஊரை சேர்ந்த ஊரான் (நாட்டாண்மை) கையால் தாலியை பெற்று மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டும் நிகழ்வு தற்போதுவரை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாலி எடுத்து கொடுக்கவேண்டிய சித்தப்பா திடீர் கைது: வாலிபர் திருமணம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Siddappa ,Siddappa Siddappa ,
× RELATED மீஞ்சூரில் வாலிபர் கொலையான...