×

சோலார் பேனல்கள் தருவதாக சென்னை நிறுவனத்திடம் ரூ.8.77 கோடி மோசடி: தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு

திருச்சி: சென்னை அரும்பாக்கம் ஜெகநாதநகரில் ரெமோன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சூரிய மின் நிலையங்களையும் நிறுவிக்கொடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக திருச்சி மாவட்டம் முசிறி மூவனூர் கிராமத்தை சேர்ந்த னிவாஸ் உள்ளார். இந்த நிறுவனத்தின் திட்டத்தளம் முசிறி மூவனூரில் உள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் ஒன்றுக்காக கடந்த 2022ம் ஆண்டு இவர்களுக்கு ஆயிரக்கணக்கான சோலார் பேனல்கள் தேவைப்பட்டது. இதற்காக சோலார் பேனல் உற்பத்தியாளரையும், வினியோகஸ்தரையும் னிவாஸ் தேடினார். அப்போது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் திலக்நகர் புதிய நல்லகுண்டாவில் செயல்பட்டு வரும் ஓனிக்ஸ் சிரி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஷிரிஷாபொலு, அவரது கணவர் பவன்குமார் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் னிவாசை அணுகினர்.

அவர்கள், தங்களிடம் சீன நிறுவனத்தின் 5,580 சோலார் பேனல்கள், தங்களுக்கு சொந்தமான சென்னை மணலியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு பேனல் விலை (ஜிஎஸ்டி தவிர்த்து) ரூ.15,450.75 என்றும் தெரிவித்தனர். மேலும் ஜிஎஸ்டி மற்றும் சரக்கு அனுப்பும் கட்டணம் எல்லாம் சேர்த்து மொத்த பேனல்களுக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 300 செலுத்த வேண்டும் என்று கூறினர். உடனே னிவாஸ், தங்களுக்கு சோலார் பேனல்கள் அவசரமாக தேவைப்படுகிறது. எனவே அவற்றை நேரில் பார்த்து, அவை புதிய பேனல்களா, தரமானவையா, தங்களுக்கு வினியோகம் செய்யும் அளவுக்கு பேனல்கள் இருப்பு உள்ளனவா? என்று ஆய்வு செய்துவிட்டு ஆர்டர் கொடுப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து ரெமோன் சொல்யூஷன்ஸ் நிறுவன ஊழியர் சதீஷ் என்பவரை அந்த குடோனுக்கு னிவாஸ் அனுப்பி வைத்தார். அங்கு ஐதராபாத் நிறுவன பிரதிநிதி செல்வகணேஷ், சோலார் பேனல் இருப்புகளை காண்பித்தார். அத்துடன், அவற்றையே உங்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம் என்றும் கூறினார். இதை நம்பி னிவாஸ், கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி 5,580 சோலார் பேனல்களை 3 நாட்களில் முசிறியில் உள்ள நிறுவனத்துக்கு வழங்கும்படி ஆர்டர் கொடுத்தார். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, அந்த சோலார் பேனல்களுக்குரிய விலையான ரூ.9.68 கோடியை ஷிரிஷாபொலுவின் ஐதராபாத்தில் உள்ள வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி சோலார் பேனலை 5 நாட்களாகியும் அனுப்பவில்லை. இதனால் னிவாஸ் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கூறினார். உடனே ஷிரிஷாபொலு ரூ.88.55 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதம் ரூ.8.77 கோடியை அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததுடன், மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து னிவாஸ் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஷிரிஷாபொலு-பவன்குமார் தம்பதி மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சோலார் பேனல்கள் தருவதாக சென்னை நிறுவனத்திடம் ரூ.8.77 கோடி மோசடி: தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Remon Solutions Private Limited ,Arumbakkam Jagannathanagar, Chennai ,Chennai ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...