×

18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் எடப்பாடிக்கு எதிராக அண்ணாமலை புதிய வியூகம்: கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ரகசிய பேச்சு

சென்னை: டெல்லியில் நடக்கும் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால், அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளை இழுக்கும் வேலையை அண்ணாமலை தற்போதே தொடங்கி விட்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெறும். இந்த தேர்தலுக்கு பாஜவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. குறிப்பாக ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமதி ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டணியில் சேரவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டம் சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து பெங்களூரில் வருகிற 17, 18ம் தேதி மீண்டும் கூட்டத்தை கூட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் எதிர்க்கட்சி அணியில் சேராத கட்சிகள், சிறிய கட்சிகளை இழுத்து கூட்டணியை அமைக்கும் பணியை பாஜக தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக பாஜக கூறி வந்தது. ஆனால் அண்ணாமலை தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் கூட்டணியை விடவும் முடியாமல் அண்ணாமலையை சமாதானப்படுத்தவும் முடியாமல் மேலிடம் திணறி வருகிறது. இந்தநிலையில் ஜெயலலிதாவைப் பற்றியும் அவரது ஆட்சியைப் பற்றியும் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதிமுக ஊழல் கட்சி, அக்கட்சியின் அமைச்சர்களாக இருந்தவர்களின் சொத்துப் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி வந்தார். இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்களுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. அதற்கு காரணம் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த பாதி பேர் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளனர். இதனால் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அதிமுக தலைவர்களின் நடவடிக்கையால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு தாமதமாக தெரியவந்தது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விட்டார். டெல்லியில் 18ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த பிறகுதான் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து மேலிடத்துக்கு அண்ணாமலை தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை என்றால், அதிமுக கூட்டணியை உடைக்க அண்ணாமலை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். அதில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக ஜான்பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோரிடம் அண்ணாமலை பேசி வருகிறார். அதேபோல ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரிடமும் அவர் பேசி வருகிறார். அவர்களுக்கு மக்களவையில் சீட் ஒதுக்குவதோடு தேர்தல் செலவையும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அதோடு மக்களவை தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான சீட் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கலந்து கொள்ளவில்லை என்றால் அன்றே கூட்டணி குறித்து அண்ணாமலை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தற்போது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The post 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் எடப்பாடிக்கு எதிராக அண்ணாமலை புதிய வியூகம்: கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ரகசிய பேச்சு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Edapati ,Chennai ,Anamalai ,Delhi ,Allied Party ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...