×

அபிராமி கடைக்கண்களே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி

அன்பர் என்பவர்க்கேஎன்பதனால் அபிராமிபட்டர் உமையம்மையின் மீது மிகுந்த அன்பு கொண்ட பக்தி உணர்வை சூட்டி சில அடையாளங்களை, சில பண்புகளை குறிப்பிடுகிறார். அது உடைய அனைவரையுமே “அன்பர்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்‌. இறைவியை விரும்பி தொழுபவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டும். உடல் முழுவதும் மயிர் சிலிர்த்து, மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டும். தன் நிலையை மறக்க வேண்டும். உள்ளுக்குள்ளே மகிழ வேண்டும். வார்த்தை தடுமாற வேண்டும். பித்தர் போல் சதா சர்வ காலமும் அபிராமியை நினைத்து உருக வேண்டும். இதையே இத்தகைய உணர்வுகளை உடையவர்களையே அன்பர் என்கிறார்.

`விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்ப்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து,
சுரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர்’ (94)

– என்பதனால் அறியலாம்.

இத்தகைய அன்பை தன் இயல்பாகக் கொண்டவரையே “அன்பர் என்பவர்க்கே” என்ற வார்த்தையால் சூட்டுகிறார். மேலும் உபாசனை செய்பவர், தியானம், பூஜை, ஜெபம், ஆலயதரிசனம், காவ்யசிரவணம், கோயில்களில் பாடுவது, கோயில்களுக்கு தொண்டு செய்வது, ஆலய அர்ச்சகர்கள், பூசாரிகள், சன்யாசிகள் அனை வரையும் அவரவர் இலக்கணத்துடன் முறையாக இருக்கும் போது “அன்பர்” என்றே அழைக்கப்படுவர். இதையெல்லாம் மனதில் கொண்டு “அன்பர் என்பவர்கே” என்கிறார்.

கனம் தரும்

“கனம்” என்பது ஒரு ஆகமக் கலைச் சொல்லாகும். இதுவரை உடல் சார்ந்த அனைத்து நன்மைகளையும் சொன்ன அபிராமிபட்டர் இந்த சொல்லால் ஆன்மாவிற்கு நன்மை செய்வதை குறிப்பிடுகிறார். ஆன்மா என்பது சாக்த சித்தாந்தத்தை பொருத்தவரை பிறப்பிற்கு முன், இறப்பிற்கு பின் உள்ள இயல்பு பண்பை உடையது உண்மையான ஆன்மா. பேய் என்பது இறந்த ஆன்மாவானது இறப்பதற்கும், பிறப்பதற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள பண்பைக் குறிக்கும் சொல்.

இதையே ‘பேயேன் அறியும் அறிவுதந்தாய்’ (61) என்பதனால் உணரலாம். அந்த வகையில் வீரர்கள் வழிபாட்டு முறையில் தன் உடலை தன்னலமின்றி முழுமையாக த்யானம் செய்பவன் கனம் என்று அழைக்கப்படுகிறான். இந்த செவிவழிச் செய்தியை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள வழிவகை செய்யும். பண்டைய காலத்தில் ராணுவத்தில் முப்பத்தி ஐந்து வயது வரை மட்டுமே பணிபுரிவர். அதற்கு மேற்பட்டு அவர்கள் அரசாங்கத்தில் பிற அரசு வேலைகளில் இருப்பர்.

அரசர்களின் சுற்றங்களில் முதன்மையானவர்கள் இவர்கள். இவர்கள் மன்னனுக்காக செயல் படுவர். அப்பொழுது போர் சமயத்தில் மன்னன் வெற்றியடைய துர்க்கைக்கு தனது தலையை அறிந்து அளிப்பதாய் வேண்டிக் கொள்வார்கள். அப்படி வெற்றி அடைந்தால் அவர் சொன்னது போலவே தனது தலையை, தானே வெட்டி இறைவியின் காலடியில் அர்ப்பணிப்பர். அப்படி வெட்டிய தலையை பலிபீடத்தில் வைப்பர். இது இறையருளால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய வீரர்களுக்கு அக்கோயிலின் முன்னர் ஒரு கல் நடப்படும். அதை வீரக்கல் என்பர். அந்த வீரக்கல்லில் அவனது பெயர் அவனே வெட்டிக் கொள்வதை போன்ற சிலை அமைத்துவைப்பர். அரசன் வெற்றியடைந்ததால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசாங்கத்தில் வேலையும் காணி நிலமும் அளிப்பர்.

பண்டைய காலத்தில் காணியாளர் என்பதை பெருமையாக பேசுவார்கள். இத்ததைய வீரர்களுக்கு துர்காதேவியானவள் தன் கருணையால் தன்னுணர்வு இருக்கும்படி அருள்வாள். இவர்கள் தங்கள் இருப்பை வேறு ஒருவர் உடலில் புகுந்து அறிவிப்பர். மேலும், துர்க்கையை வணங்குவோர்க்கு எதிர்கால இடையூறுகள் நன்மைகளை சொல்லி ஆற்றுப்படுத்துவார்கள். அதாவது, நம்பிக்கையை வலியுறுத்துவார்கள்.

இந்த வீரர்கள் துர்க்கையை விட்டு நீங்காமல் எப்பொழுதும் இருப்பார்கள். துர்க்கையின் அருளை பெற்று அவள் அருகிலேயே இருக்கிறார்கள். இத்தகைய வீரக்கல், குறுக்கை வீரட்டேஸ்வரருக்கு அருகிலுள்ள வனதுர்க்கை, குன்றத்தூர் கோயிலின் குளக்கரை போன்ற இடங்களில் இன்றும் காணப்படுவதை கொண்டு அறியலாம். இத்தகைய கனங்களுக்கு வழிபாடு செய்து முத்தியைப் பெறலாம் என்கிறது சாக்ததந்திரம். இந்த வீரர்களுக்கு எப்பொழுதுமே மாமிசம் படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களின் வழிபாட்டால் இறைவியின் மீது நம்பிக்கையையும், பக்தர்களின் ஐயப்பாட்டை தீர்த்து வைக்கும் அருள் வாக்கு சொல்லும். ஆன்மாவிற்கு துர்க்கையின் அருளால் கிடைக்கும் சாம்பமுத்தி பதவியையே “கனம் தரும்” என்கிறார்.

பூங்குழலாள்

என்பது ஒரு உபாசனை கலைச்சொல். “பூங்குழலாள்’’ என்ற சொல்லானது அபிராமிக்கு பெயர் சூட்டும் போது கும்பாபிஷேக நெறிமுறையில் அக்ஷரத்திற்கு லட்சம் ஜபம் செய்து, ஜெபிப்பவருக்கு அதற்கு உண்டான அஷ்டாங்கம் என்று வழங்கப்படும் தர்ப்பணம், தானம், போஜனம், பூஜனம், ஹோமம், மார்ஜனம், பாராயணம், குருசரணம், போன்ற ழிபாடுகளையெல்லாம் யந்திரம், மந்திரம், உருவம் வைத்து பாலாலயம் என்று சிறிய ஆலயம் அமைத்து ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுக்குள் ஆகமத்தின் விதிப்படி பூசனைகள் செய்வதனால் உபாசகனுக்கு உமையம்மை தன் உருவை காட்டியருள்வாள். அந்த உருவத்தில் உள்ள அடையாளத்தை கொண்டே அந்த உமையம்மைக்கு பெயரிடுவர்.

இதையே மலர்குழல், வண்டார்குழலி, பெருமுலை நங்கை, இளமுலை நங்கை, உண்ணாமுலை என்ற அவயவங்களை கொண்டு பெயரிட்டு இருப்பதைக் கொண்டு அறியலாம். அந்த வகையில் “பூங்குழலாள்’’ என்பது அபிராமி அம்மைக்கு ஆகமத்திற்காக வைக்கப்பட்ட பெயர். இதற்கு சுகந்த குந்தலாம்பிகா என்பது பெயர்.

இது போன்ற உபாசகருக்கு கிடைக்கும் தனி அடையாளம் பெயர்களையே “பூங்குழலாள்’’ என்று சூட்டுகிறார். இந்த அடையாளங்களை பெறுவதே சித்தியாகும். ‘சித்தியும் சித்தி தரும் தெய்வம்’ (29) என்பதனால் அறியலாம். இவ்வடையாளத்தை கொண்டு உபாசகனுக்கு மட்டும் விளங்கித் தோன்றும் உமையம்மையின் திருவுருவம், அவள் பேசும் மொழி, அதை அறிந்து உணர்ந்து மக்களுக்கு வெளிப்படுத்தும் வல்லமை, இவையெல்லாம் உண்டாகும். ஒரு முறை வந்த அடையாளம் பிறகு எப்பொழுதும் மாறாது.

மரணித்தாலும் அடுத்த பிறவியிலும், மாறாது என்கின்றனர் சாதகர்கள். அந்த அடையாளத்தை பெற்றுவிட்டால் உமையம்மையின் அருள் உறுதி செய்யப்பட்டதாகிறது. இதுவே இறை அனுபவங்கள் அனைத்திற்கும் அடிப்படை. இத்தகைய அடையாளத்தை பெற்று இறையருளை பெற்று சாத்தியப்படுத்த சக்கரத்தில் சோடாஷாக்ஷரி மந்திரத்தால் பூசிக்க வேண்டும் [அதை எழுதுதல் கூடாது என்பதனால் எழுதவில்லை, குருவினை கேட்டு அறிக]. இந்த பூங்குழலாள் என்பது பெயரல்ல அவரவர்களுக்குரிய தனி அடையாளம்.

அதை பெறுவதற்கு ரத்தினத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து பூசிப்பது ஒருவகை. அதுபோல் பட்டரால் பூசிக்கப்பட்டதே உமையம்மையின் தோடு என்கிறார்கள். அந்த தோடே உமையம்மை வீசி எறிந்தாள் என்கிறார்கள் சிலர் [செவிவழிதகவல்] இந்த தோடு உமையம்மையால் பட்டருக்கு கொடுக்கப்பட்டது. இது அத்தனையும் கருத்தில்கொண்டே “பூங்குழலாள்’’ என்ற பெயரைச் சூட்டுகிறார். ‘பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’ (27) என்பதனாலும் ‘நகையே’ (93) என்பதனாலும் உமையம்மையிடத்து தன் பொருட்டு பெற்ற அடையாளத்தையே “பூங்குழலாள்’’ என்கிறார்.

அபிராமி கடைக்கண்களே

உடல் உறுப்புக்களுள் தலையும், புலன்களுள் கண்ணும், மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. ஞானத்தைப் பொருத்தவரை ‘கண்களிக் கும்படி கண்டு கொண்டேன்’ (70) என்ற பட்டர், உமையம்மையின் ஒலியை கேட்டேன் என்று சொல்லவில்லை. அதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. சிற்ப சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, கண்ணிற்கு மிகச் சிறந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனி சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.

அகோரமூர்த்திக்கு, அகோரேசிக்கும் உருண்டையான கண்கள், உயர்த்திய புருவம், சிவனுக்கு மூன்று கண்ணும், ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூன்று தன்மை கொண்டதும், ஒன்றுபோல் ஒன்று இல்லாத கண்கள் கொண்டவர் ருத்ரன், தஷ்ணாமூர்த்தி கண்கள் மூக்கு நுனியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மனோன்மணிக்கு சம திருஷ்ட்டி என்று கூறப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தருவது. அகோரமூர்த்தியின் பார்வை பாவத்தை போக்கும். அகோரேசியின் கண்கள் போகத்தை கொடுக்கும். தட்சிணாமூர்த்தியின் கண்கள் ஞானத்தை கொடுக்கும். இலக்குமியின் கண்கள் செல்வத்தைக் கொடுக்கும்.

இங்கு உமையம்மையின் கண்களை பற்றி பேசுகிறார் “கடைக்கண்களே’’ உமையம்மையின் கண்கள் இரண்டு. அவற்றின் கடைக்கண்கள் நாம் இதுவரை சொன்ன

“தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்;’’ இவை அனைத்தையும் ஒருங்கே தருவது “அபிராமி கடைக்கண்களே”.

‘அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு’ (39) என்பதனால் மோட்சத்தையும் தர வல்லது உமையம்மையின் கடைக்கண். இரண்டு கண்களின் கடைக்கண் பார்வை ஞானத்தை அளிக்கும் என்கின்றது. இவை அனைத்தையும் கொண்டே திருக்கடவூரில் உள்ள அபிராமியை “கடைக்கண்களே” என்கிறார்.

அந்தமாக

“தனம்தரும்” என்பதால் லட்சுமியையும் “கல்விதரும்” என்பதால் சரஸ்வதியையும் “ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’’ என்பதால் பார்வதியையும் “தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும் நல்லன எல்லாம் தரும்’’ என்பதனால் அறத்தையும், சாக்த வழிபாட்டுப் பயனையும் சூட்டி “அன்பர் என்பவர்க்கே கனம் தரும்’’ என்று உமையம்மை அடியவர்கள் வழிபட்டால் பெரும் முக்தியையும் “பூங்குழலாள்” என்பதனால் ஞானத்தையும் “அபிராமி கடைக்கண்களே” என்பதால் அபிராமி வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு அனைத்தும் கிடைக்கும் என்று நுாற்பயனை முழுவதுமாக இப்பாடலிலேயே குறிப்பிட்டுள்ளார். அவளை வணங்கி பயன் பெறுவோம்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி கடைக்கண்களே! appeared first on Dinakaran.

Tags : Abhirami Anthadi ,Abhiramibhatta ,Umaiyammai ,Abhirami ,
× RELATED சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி