×

பழையபேட்டையில் புதிய பாலப்பணிகளால் குற்றால சீசனுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதி

*பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி

நெல்லை : நெல்லை அருகே பழையபேட்டை கண்டியப்பேரியில் புதிய வாய்க்கால் பாலப்பணிகள் நடைபெறுவதால், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. குற்றால சீசன் நேரத்தில் பாலப்பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லை டவுனில் இருந்து தென்காசி செல்லும் பிரதான சாலையில், பழையபேட்டைக்கு முன்பு கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகில் வாய்க்கால் பாலம் முழுவதுமாக பழுதடைந்துள்ளது. இந்த பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கடந்த இரு நாட்களாக சோதனை ஓட்டமும் நடந்தது.

இதன்படி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் சந்திப்பு பஸ்நிலையம், டவுன், தெற்கு மவுண்ட்ரோடு, டிவிஎஸ் கார்னர், கோடீஸ்வரன் நகர், பேட்டை செக்கடி, மதிதா இந்து கல்லூரி, திருப்பணிகரிசல்குளம் விலக்கு, இ.பி அலுவலகம், பழையபேட்டை வழியாக தென்காசிக்கு சென்று வருகின்றன.
தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் பழையபேட்டை, இ.பி அலுவலகம், ரொட்டிக்கடை நிறுத்தம், செக்கடி, கோடீஸ்வரன் நகர் வழியாக நெல்லைக்கு வருகின்றன. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் நெல்லை மாநகரில் டவுன், பழையபேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. டவுன் கோடீஸ்வரன் நகர் சாலை இருவழி போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. அங்கு அதிக பஸ்கள் வருவதால், அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பழையபேட்டை இபி அலுவலகம் தொடங்கி ரொட்டிக்கடை நிறுத்தம் வரை இதே பிரச்னை நீடிக்கிறது.

இதுதவிர கண்டியப்பேரி பாலம் அருகில் அமைக்கப்படும் சர்வீஸ் சாலையை இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றன. அங்கும் சில சமயங்களில் வாகனங்கள் குவிந்து விடுகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அதிக போக்குவரத்து காணப்படும்போது, திங்கள் தொடங்கி வெள்ளி வரையிலான வாராந்திர நாட்களில் அதிக நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள் பேட்டை பகுதியை சுற்றி செல்வதால், மாணவ, மாணவிகள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் குற்றாலம் செல்லும் வாகனங்களும் பழையபேட்டை பகுதியில் தட்டுத்தடுமாறியே செல்கின்றன.

இதுகுறித்து பழையபேட்டை பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குற்றாலம் சீசன் காலத்தில் புதிய பாலம் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
வேன்களில் வரும் பலர் புதிய பாதை தெரியாமல் கோடீஸ்வரன் நகர், பேட்டைக்குள் நுழைந்துவிடுகின்றனர். புதிய பாலப்பணிகள் நடக்கும் இடத்தை ஓட்டி தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கார்கள், மினி லாரிகள் மட்டுமே செல்ல முடியும். அதை விஸ்தரித்து பஸ்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தென்காசிக்கு செல்லும் பஸ்கள் பேட்டை செக்கடி வழியாகவும், மறுமார்க்கத்தில் நெல்லைக்கு வரும் பஸ்கள் பாலப்பணிகள் நடக்கும் மண் சாலை வழியாக திரும்பவும் வழிகிடைக்கும்’’ என்றனர்.

பஸ் நிறுத்த வசதிகள் தேவை

நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் பஸ்களும், தென்காசியில் இருந்து நெல்லை வரும் பஸ்களும் தற்போது சுற்றி செல்வதால், பழையபேட்டை இ.பி. அலுவலகம் அருகே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன. அங்கு பயணிகள் அமரவோ அல்லது வெயில், மழைக்கு ஒதுங்கவோ பஸ் நிறுத்த வசதிகள் இல்லை. எனவே அங்கு ஒரு தற்காலிக நிழற்கூடை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

The post பழையபேட்டையில் புதிய பாலப்பணிகளால் குற்றால சீசனுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Paddy Kandiyaperi ,Paddy ,Nelli ,New Palaces of Organ ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...