×

கூடலூரில் பிரியாணி மேளா மூலம் கிடைத்த ரூ.2.30 லட்சம் சிறுநீரக நோயாளிக்கு வழங்கல்

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சின்ன சூண்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மாலினி தம்பதிகளின் மகள் வினித்ராவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கூடலூர் அக்னி சிறகுகள் அமைப்பினர் பிரியாணி மேளா நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகை ரூ.2.25 லட்சம் ரூபாயை மருத்துவ செலவிற்காக வழங்கி உள்ளனர்.
சின்ன சூண்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து கூலித் தொழிலாளி. இவரது மகள் வினித்ரா திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயாரின் சிறுநீரகத்தை மாற்று சிறுநீரகமாக பொருத்துவதற்காக சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக பெரிய அளவில் செலவு செய்து வந்த குடும்பத்தினருக்கு அக்னி சிறகுகள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், வியாபாரிகள் மூலம் பிரியாணி தயாரிப்பதற்கான பொருட்களை முடிந்த வரை இலவசமாக பெற்று செலவுகளை குறைத்து பிரியாணி தயாரித்து வழங்கும் பிரியாணி மேளா ஒன்றை நடத்தினர்.

இதற்கு இன மத மொழி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து பிரியாணி ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டனர். ஒரு பிரியாணி பொட்டலம் 100 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ரூபாய் 2.25 லட்சம் ரூபாயை வினித்ராவின் குடும்பத்திடம் வழங்கினர். மிகப்பெரிய அளவிலான மருத்துவ செலவு தொகைக்கு சிரமப்பட்டு வந்த குடும்பத்திற்கு இந்த இளைஞர்களின் முயற்சியால் கிடைத்த தொகை பெரும் உதவியக அமைந்துள்ளது. சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக உதவுவதற்காக பெருமளவிலானோர் முன்வந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட அக்னி சிறகுகள் அமைப்பு இளைஞர்களுக்கு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தங்களின் முயற்சிக்கு உதவிய நீலகிரி சமூக ஆர்வலர் சங்கம், கூடலூர் தச்சுத் (கார்பென்டர்) தொழிலாளர்கள் சங்கம், ஜிஎம்டியூ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வியாபாரிகள், தன்னலமற்று உதவி புரிந்த சீபுரம் பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அக்னி சிறகுகள் அமைப்பின் இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post கூடலூரில் பிரியாணி மேளா மூலம் கிடைத்த ரூ.2.30 லட்சம் சிறுநீரக நோயாளிக்கு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Biryani Mela ,Kudalur ,Cuddalore ,Vinetra ,Marimuthu Malini ,Chinna Choondi ,Oveli ,
× RELATED கூடலூரில் அரசு, தனியார் பள்ளி ஜூனியர்...