×
Saravana Stores

ஊட்டி-200வது ஆண்டு நிறைவையொட்டி சாலையோர பூங்காவில் தோடர் குடில் யானைகள் உருவங்கள், நீரூற்று அமைப்பு

ஊட்டி : ஊட்டி அருகே எச்பிஎப் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவில் ரூ.80 லட்சம் செலவில் தோடர் பழங்குடியின மக்களின் சிலைகள் மற்றும் யானைகள், நீரூற்று உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே கொடநாடு காட்சிமுனை, குன்னூரில் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் காட்சி முனைகள் உள்ளன. ஊட்டியில் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் காட்சி கோபுரம் உள்ளது.

இதுதவிர முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாயாறு அருவியை காண்பதற்கான காட்சி கோபுரம் உள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மகிழ்கின்றனர். ஆண்டு முழுவதும் நிலவ கூடிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டி கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது.

கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி-200 திட்டத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிதியை கொண்டு பல்ேவறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி நகரின் சிறப்பை குறிக்கும் வகையில் நகரின் பல்வேறு இடங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து வருவோர் குன்னூரில் இருந்து வேலி வியூ வழியாக ஊட்டி வருகின்றனர்.

இதனால் ஊட்டி நகரின் நுழைவுவாயில் பகுதியான வேலிவியூ பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளா, கர்நாடகாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டி வருகின்றனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், பார்த்து மகிழவும் வசதியாக ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எச்பிஎப் பகுதியில் சாலையின் நடுவே உள்ள பூங்கா ரூ.80 லட்சம் செலவில் பொலிவுபடுத்தப்பட்டு அங்கு தோடர் பழங்குடியின மக்களின் சிலைகள், எலிபெண்ட் விஸ்பரர் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் உருவங்கள், மான்கள், நீரூற்று உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர ஹில்பங்க் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவும் பொலிவுபடுத்தப்பட்டு காட்டுமாடு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சில பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி எச்பிஎப் பகுதியில் சாலையின் நடுவே உள்ள பூங்கா பொலிவுபடுத்தப்பட்டு அங்கு ரூ.80 லட்சம் செலவில் பைபர் மூலம் செய்யப்பட்ட தோடர் பழங்குடியின மக்களின் சிலைகள், அவர்களது இல்லம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் தோடர் பழங்குடியின மக்கள் இளவட்ட கல் தூக்குவது போலவும், பாரம்பரிய எம்ராய்டரி துணி அணிந்திருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர எலிபெண்ட் விஸ்பரர் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் உருவங்கள், நீரூற்று, புள்ளிமான் சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் பல்வேறு வண்ணங்களில் மின்னுகின்றன. இந்த பைபர் சிலைகள் அனைத்தும் பூம்பூகாரில் செய்யப்பட்டு கண்டெய்னர் மூலம் எடுத்து வரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்ட பின்னர் விரைவில் திறக்கப்படும், என்றனர்.

The post ஊட்டி-200வது ஆண்டு நிறைவையொட்டி சாலையோர பூங்காவில் தோடர் குடில் யானைகள் உருவங்கள், நீரூற்று அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thodar ,HPF ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்