×

வீட்டின் முன்பு செருப்பை வைக்கும் தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு பெண் கொலை

*எதிர்வீட்டுக்காரர் கைது

திருவொற்றியூர் : வீட்டின் முன்பு செருப்பை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கொலை செய்த எதிர்வீட்டை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன் (43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (40). இவர்கள் 2வது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வசந்தி வீட்டு வாசல் முன்பு, அட்டை பெட்டியில் செருப்புகளை வைப்பது வழக்கம்.

இதற்கு எதிர்வீட்டில் வசித்து வரும் குமார் (50) என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி இதுதொடர்பாக, வசந்தியிடம் குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட வசந்தியின் கணவர் புஷ்பகாந்தனிடமும் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இது மோதலாக மாறியது. அப்போது குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த குமார், திடீரென புஷ்பகாந்தன் மற்றும் அவரது மனைவி வசந்தியை தாக்கி, கீழே தள்ளி உள்ளார். இதில் நிலைதடுமாறிய வசந்தி வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார்.

பலத்த காயமடைந்த வசந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரா கொலை வழக்காக மாற்றி, குமாரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீட்டின் முன்பு செருப்பை வைக்கும் தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு பெண் கொலை appeared first on Dinakaran.

Tags : Reverseer ,Thiruvottriyur ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் 2 ஆண்டாக...