×

சிறுமுகை பவானி ஆற்றங்கரையில் முதலை

*வீடியோ வைரல் கிராம மக்கள் பீதி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் ராட்சத முதலை நடமாடி வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம அருக உள்ளது சிறுமுகை. இங்குள்ள லிங்காபுரத்தில் பவானி ஆறு செல்கிறது. தற்போது லிங்காபுரம்-காந்தவயல் இடையே காந்தையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இங்குள்ள மக்கள் மீன் பிடிப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் காந்தையாறு பவானி ஆற்றங்கரையில் நீரில் அடித்து வரப்பட்ட ராட்சத முதலை ஒன்று தரையில் சர்வ சாதாரணமாக ஓய்வெடுத்து வருவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ஒரு பரிசல் ஓட்டி செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் ஆற்றங்கரை ஓரத்தில் அமைதியாக படுத்திருக்கும் முதலை சற்று நேரத்தில் பவானி ஆற்றில் இறங்குகிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்த இந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். குளிக்கவும், துணி துவைக்கவும் பவானி ஆற்று நீரைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது பவானி ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பவானி ஆற்றில் சுற்றித்திரியும் முதலையை பிடித்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சிறுமுகை பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘லிங்காபுரம் பகுதியில் முதலை நடமாட்டம் தென்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்குவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது. அதேபோல் மீன் பிடிக்க செல்வோர் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்’’ என்றனர்.

The post சிறுமுகை பவானி ஆற்றங்கரையில் முதலை appeared first on Dinakaran.

Tags : Sirumugai Bhavani river bank ,Mettupalayam ,Bhavani river ,Mettupalayam.… ,Bhavani river bank ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது