×

பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருப்பணிக்காக கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி வரைவோலை வழங்கப்பட்டது. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2022-2023 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.2 இலட்சம் வீதம் ரூ.50 கோடியை வழங்கிடும் அடையாளமாக 20 திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை பழமைமாறாமல் புனரமைத்து குடமுழுக்கு நடத்துதல். திருக்குளத் திருப்பணி, திருத்தேர் திருப்பணி மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

2021-2022 மானியக் ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் கோரிக்கையில்:
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும், கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்படி கிராம பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 5.1.2023 அன்று 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சென்னை, வில்லிவாக்கத்தில் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 2022-2023-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சம் வீதம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அந்தந்த திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் அ.சங்கர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thirakoils ,G.K. Stalin ,Chennai ,Mukhera ,Tirupani ,Thirukoyils ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...