×

திருச்சி – திண்டுக்கல் சாலை கே.கள்ளிக்குடியில் வாரச்சந்தைக்கு புதிய சிமென்ட் தளம்

 

திருச்சி, ஜூலை 10: கே.கள்ளக்குடி வாரச்சந்தைக்கு ரூ.9.75 லட்சத்தில் புதிய சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கே.கள்ளிக்குடி ஊராட்சி திருச்சி – திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் வளர்ந்து வரும் பகுதியையொட்டி அமைந்துள்ள புறநகர் ஊராட்சியான கே.கள்ளிக்குடியில் வாரம்தோறும் சனிக்கிழமை அன்று சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் கே.கள்ளிக்குடி, ராம்ஜிநகர், புங்கனூர், குட்டப்பட்டி, சத்திரப்பட்டி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மட்டுமின்றி, ஆலம்பட்டிபுதூர், மறவனூர், மணப்பாறை வரை இருச்சக்கர வாகனம், கார்களில் செல்வோரும் தங்கள் வாகனத்தை நிறுத்தி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சந்தை குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் கட்டாந்தரையில் சந்தை நடந்து வந்தது. மழை நேரத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வீணாகிவிடுவதாகவும், சிமென்ட் தளம் அமைத்து, செட் அமைத்து தரும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கே.கள்ளிக்குடி ஊராட்சி ரூ.9.75 லட்சம் நிதி ஒதுக்கி, அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2ன் கீழ் கே.கள்ளிக்குடி சந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கே.கள்ளிக்குடி தலைவர் சுந்தரம் கூறுகையில், 70 கடைகள் எண்ணிக்கையில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் செட் அமைத்து தரப்படும். எதிர்காலத்தில் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து சிமென்ட் தளத்துடன் கூடிய செட் அமைக்கப்படும்’ என்றார்.

The post திருச்சி – திண்டுக்கல் சாலை கே.கள்ளிக்குடியில் வாரச்சந்தைக்கு புதிய சிமென்ட் தளம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dindigul road ,Kallikkudi ,K. Gallikudi ,Trichy – ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...