பெரணமல்லூர், ஜூலை 10: ‘நாங்க கலெக்டர் ஆபிசிலேயே போஸ்டர் ஒட்டி உள்ளோம். போஸ்டர் மீது கை வச்சா வெட்டுவோம்’ என பிடிஓவுக்கு அதிமுக நிர்வாகி பகிரங்க மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்யாறு டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன். இவரது தம்பி ஏ.கே.எஸ்.அறிவழகன் அதிமுக நகர துணை செயலாளர் மற்றும் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி செய்யாறு பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக முன்னாள் எம்எல்ஏ சார்பில், பெரணமல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதேபோல் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய சுவரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சேர்மன் மற்றும் பிடிஓ, வேளாண்மை உதவி இயக்குனர் ஆகியோர் அலுவலக உதவியாளர் மூலமாக போஸ்டரை அகற்றினர். மேலும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் குறித்து போன் மூலம் நகரத் துணைச் செயலாளர் ஏ.கே.எஸ் அறிவழகனிடம், பிடிஓ தொடர்பு கொண்டு ‘கட்சி போஸ்டர்களை ஏன் அலுவலக வளாகத்தில் உள்ளே ஒட்ட வேண்டும்’ என கேட்டுள்ளார்.
அதற்கு ஏ.கே.எஸ் ‘போஸ்டரை நான் ஒட்டவில்லை’ என கூறினார். உடனே பிடிஓ, ‘உங்களுடைய அண்ணன் போஸ்டர் தான். அதனை நீங்கள் தான் ஓட்டுனீர்கள்’ என கேட்டார். அதற்கு ‘நாங்க கண்டன போஸ்டர்களை கலெக்டர் ஆபிசிலேயே ஒட்டி உள்ளோம். அங்கு யாரும் கேட்பதில்லையே?’ என பதிலளித்தார். தொடர்ந்து பிடிஓ ‘கண்டன போஸ்டர் வேறு, இது கட்சி போஸ்டர்’ என தெரிவித்தார். அதற்கு அறிவழகன் ‘இது ஏ.கே.எஸ் போஸ்டர். இதன் மீது யாரும் கையை வைக்க கூடாது. அப்படி கையை வைத்தால் கையை வெட்டுவேன். போஸ்டர் ஒட்டியதற்கு அபராதம் போடுங்கள். இல்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள்’ என மிரட்டல் பாணியில் பேசியுள்ளார்.
இந்நிலையில், இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நேற்று செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து சேர்மன் மற்றும் பிடிஓவிடம் விசாரித்து, இதுகுறித்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்படி புகார் கொடுத்தால் அதிமுக நிர்வாகி மீது கைது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. அதிகாரியை அதிமுக நிர்வாகி பகிரங்கமாக மிரட்டிய ஆடியோ வைரலானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ‘போஸ்டர் மீது கை வச்சா வெட்டுவோம்’ என பிடிஓவுக்கு அதிமுக நிர்வாகி பகிரங்க மிரட்டல் ஆடியோ வைரல்; செய்யாறு டிஎஸ்பி விசாரணை நாங்க கலெக்டர் ஆபிசிலேயே ஒட்டி உள்ளோம் appeared first on Dinakaran.