×

தோட்டங்களை முறையாக பராமரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

 

கூடலூர், ஜூலை 10: கூடலூர் உட்கோட்டத்தில் 628 ஹெக்டர் பரப்பளவில் வாழை, 163 ஹெக்டர் பரப்பளவில் இஞ்சி, 949 ஹெக்டர் பரப்பளவில் குறுமிளகு, 414 ஹெக்டர் பரப்பளவில் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது அதிக அளவிலான மழைப்பொழிவு காரணமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாலும், பயிர்களில் பூஞ்சன வளர்ச்சி மற்றும் அழுகல் நோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வயல்களில் சரியான வடிகால் ஏற்படுத்தி மழை நீர் தேங்கா வண்ணம் பாதுகாக்க வேண்டும். வாழை மரங்களுக்கு உரிய அளவில் முறையாக முட்டுக்கொடுத்து காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். அழுகல் நோய் வராமல் தடுக்க 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். குறுமிளகு செடிகளுக்கு 2% டிரைக்கோடெர்மா விரிடி கரைசலை தெளிப்பதன் மூலம் வாடல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

பயிர்களுக்கு 3% தசகாவ்யா 7 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். நோய் தாக்கப்பட்ட பயிர்களை அப்பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மழை மற்றும் காற்றினால் பயிர்கள் சேதம் அடைந்திருந்தால், அப்பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர், கூடலூர் அலுவலகத்திற்கு விவசாயிகள் தெரிவிக்குமாறு கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

The post தோட்டங்களை முறையாக பராமரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Utkotam ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...