×

ஆட்டோமொபைல் துறையை வலுவாக்க சாமானிய மெக்கானிக்குகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்: வீடியோ வெளியிட்டு ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி கரோல் பாக்கில் பைக் மெக்கானிக்குகளுடன் உரையாடிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையை வலுப்படுத்த மெக்கானிக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லாரியில் பயணித்தார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர் கடந்த ஜூன் 27ம் தேதி டெல்லியில், கரோல் பாக் பகுதிக்கு சென்று சாமானிய பைக் மெக்கானிக்குகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் தனது டிவிட்டரில் நேற்று வெளியிட்டார். அந்த வீடியோவில் ராகுல் தன்னிடம் கேடிஎம் 390 பைக் இருப்பதாகவும், அதை ஓட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்காததால் பயன்படுத்தாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஏக்கத்துடன் பேசினார். மேலும், பைக் சர்வீஸ் செய்வது பற்றி நானும் கற்றுக் கொள்கிறேன் என ஸ்பானரை எடுத்து ராகுல், மெக்கானிக் வேலைகளை செய்தார். பைக்கை ஸ்டார்ட் செய்தும் சரிபார்த்தார்.அப்போது ஒரு மெக்கானிக், ‘எப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள்’ என கேட்டதற்கு ராகுல், ‘எப்போதோ, பார்க்கலாம்’ என கூலாக பதிலளிக்கிறார்.

பின்னர் மெக்கானிக்குகளிடம் ராகுல், ‘‘உங்கள் திறமைக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டும்’ என பேசினார். இந்த வீடியோவுடன் ராகுல், ‘இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை வலுப்படுத்த, இந்திய மெக்கானிக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது’ என பதிவிட்டுள்ளார். யூடியூப்பில் இந்த வீடியோவின் முழு பதிவையும் வெளியிட்டுள்ள ராகுல், ‘பாரரதத்தின் சக்கரங்களை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்த கடின உழைப்பாளிகளுடன் உரையாடினேன். இந்தியாவில் உள்ள மெக்கானிக்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் கனவுகளை அறியவும் நான் முயற்சி செய்தேன். மூத்த மெக்கானிக் உமேத் ஷா, சிறுவயதில் வறுமை எப்படி அவரது படிப்பை நிறுத்தி மெக்கானிக் வேலைக்கு வர தூண்டியது என்பதை விவரித்தார். குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் காரணமாக, தங்கள் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களை எப்படி கவலையடையச் செய்கிறது என்பதை மெக்கானிக் பஸ்வான் சென்னும் என்னிடம் கூறினார். ஆட்டோமொபைல் தொழிற்துறையை நிலைநிறுத்த நமது மெக்கானிக் வல்லுநர்கள் உழைக்கிறார்கள். அவர்கள் சிறந்த வசதி, வாய்ப்புகளை அணுகுவதற்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாரதத்தின் உண்மையான முன்னேற்றம்’ என கூறி உள்ளார்.

The post ஆட்டோமொபைல் துறையை வலுவாக்க சாமானிய மெக்கானிக்குகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்: வீடியோ வெளியிட்டு ராகுல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Rahul Gandhi ,Delhi ,Karol Bagh ,India ,
× RELATED மனித பிறவியே இல்லை என்பதா?...