×

ஆயிரம் விளக்கு பகுதியில் 770 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆயிரம்விளக்கு பகுதியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்ட பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடி மதிப்பிலான 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், பணிகள் குழு தலைவர் சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் மதன்மோகன், வாரிய தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், அரசு அலுவலர்கள் மற்றும் வாரிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்:

டாக்டர் தாமஸ் சாலை திட்ட பகுதியில் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 300 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.77.74 கோடி மதிப்பில் 470 புதிய குடியிருப்புகள் கட்டவும், அதேபோல சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 256 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.56.52 கோடி மதிப்பில் 300 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி 18 மாத காலத்தில் முடிக்கப்பட்டு, இதில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்.

சென்னையில் 27,038 குடியிருப்புகளும், மாநிலத்தின் இதர நகரங்களில் 3,354 குடியிருப்புகளும் என மொத்தம் 30,392 குடியிருப்புகள், காலநிலை மாற்றம் நீண்ட நாள் பயன்பாட்டால் சிதிலமடைந்து உள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில், ரூ.2,400 கோடி மதிப்பில் 15,000 புதிய குடியிருப்புகள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக, சென்னையில் 10 திட்டப் பகுதிகளில் உள்ள 3,934 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டும், 11 திட்டப்பகுதியில் 2,258 குடியிருப்புகள் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், 20 திட்டப் பகுதிகளில் 7,175 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. அதன்படி, ஓரிரு மாதங்களில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும். அதேபோல, 19 திட்டப் பகுதிகளில் 6,805 குடியிருப்புகள் இடிக்கும் பணி விரையில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆயிரம் விளக்கு பகுதியில் 770 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ayaar Lampu ,Minister ,Thamo Anparasan ,Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...