×

கலைஞர் நூலகத்தின் கலர்ஃபுல் ஹைலைட்ஸ்:கலைஞருடன் கலந்துரையாடலாம் குட்டீஸ்களை கவரும் ‘குட்டி வனம்’

மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கலைஞருடன் கலந்துரையாடுவது போன்ற நிகழ்வு, குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா போன்றவை அனைத்து தரப்பையும் கவரும் வகையில் உள்ளன.மதுரை புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்காக, கடந்த 2022, ஜன.11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஒன்றரை ஆண்டுக்குள் கட்டுமானம் உட்பட அனைத்து விதமான பணிகள் முடிந்து, ரூ.215 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கண்கவர் கட்டுமானத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. நூலகத்தின் நடுப்பகுதியில் முற்றம், கண்ணாடிப்பேழை கூடாரம், ஜெர்மன் கண்ணாடி சுவர் பூச்சு, 6 லிப்ட்கள், 4 எஸ்கலேட்டர்கள், நவீன பார்க்கிங் என முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கலைஞர் நூலகம் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் உள்ள சில சிறப்பம்சங்களை இங்கு காணலாம். நலம் விசாரிப்பார் கலைஞர்… நூலகத்தின் முன் பகுதியில் கலைஞர் அமர்ந்து கையில் உள்ள நூலை படிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் பீடத்தை சுற்றி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில், கலைஞர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அவர் எழுதிய நூல்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவரின் நூல்களை படித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்க விரும்புவோர் அந்த அரங்கில் ஒரு இருக்கையில் அமர்ந்தால், அருகே உள்ள டிஜிட்டல் டிவியில், கலைஞர் தோன்றி, உங்கள் அருகே அமர்ந்து நலம் விசாரிப்பார். நூலகம் தொடர்பாக உங்களிடம் பேசுவார். டிஜிட்டல் டிவியில் உங்களிடம் கலைஞர் பேசுவது போல தோன்றும் காட்சி உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்காக தனி சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு, கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை சென்னையை சேர்ந்த ‘அன்கிடைய்’ அறிவியல் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதயம் துடிக்கிறதே…நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா மற்றும் கண்டுபிடிப்புகள் அடங்கிய உபகரணக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் அன்கிடைய் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இக்கூடத்தில், 14 வகையான அறிவியல் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் இயங்குதல், சோலார் எடை இயந்திரம் மூலம் வான்வெளியில் மனிதனின் உடல் எடை அறிதல், மனித உடற்கூறை விளக்கிக்கூறும் 5 அடி நீள டிஜிட்டல் கம்ப்யூட்டர் உள்ளது. மனிதனின் மூளை, கண்கள், இதயம், எலும்பு, தசை, ரத்த நாளங்கள் என அனைத்து உறுப்புகளும் எவ்வாறு இயங்குகிறது என்பதை சிறுவர்களுக்கு விளக்கி கூறும் வகையில் டிஜிட்டல் கம்ப்யூட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல… மெத்தை போல அமைக்கப்பட்டுள்ள ஒன்றில், குழந்தைகள் செல்லும்போது வனத்திற்குள் செல்வது போல ஒரு குதூகலமான உணர்வை தரும். இதன்மூலம் நூலகத்திற்கு குழந்தைகளின் வருகையும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குளம் வெட்டலாமா…?பொதுவாக, ஒரு பகுதியில் புதிதாக குளம், கால்வாய், கட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய வகையில் கணிதவியல் பூங்காவான ஏ.ஆர் ஜன்பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நூலகப்பகுதியில் பிரத்யோகமான மணல் போன்ற கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம், நமக்கு புதிதாக கால்வாய் தோண்ட தேவையான இடமானது அந்த மணல்படிகையில் பதிவிடப்படுகிறது. இதன்மூலம் எங்கு கால்வாய் அல்லது குளம் வெட்ட வேண்டுமோ அந்த இடத்தில், மணல் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகை காண்பிக்க நீல நிறமாக மாறுகிறது. குவிக்கப்பட்ட மண் குவியல் மலை, பசுமையான புல்வெளி பச்சை நிறத்திலும் மாறி நம்மை பரவசப்படுத்துகிறது. விமானம் எவ்வாறு இயங்குகிறது என்பதை செயற்கையான முறையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டதன் மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கும்போது, அவர்கள் விமானியாக சேர வாய்ப்பு உள்ளது. இதுபோல எண்ணற்ற சிறப்பம்சங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ளன. படிக்க, ரசிக்க, புதிய அனுபவத்தை உணர ஆசையா? வரும் 15ம் தேதி வரை பொறுமையாக இருங்க… கண்கவர் நூலகத்தை கண்டு களிக்கலாம் மக்களே…!

The post கலைஞர் நூலகத்தின் கலர்ஃபுல் ஹைலைட்ஸ்:கலைஞருடன் கலந்துரையாடலாம் குட்டீஸ்களை கவரும் ‘குட்டி வனம்’ appeared first on Dinakaran.

Tags : Kuti Vanam ,Madurai ,Artist Centenary Library ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி