×

பரமத்திவேலூர் அருகே தொடரும் பதற்றம் ஆயிரம் பாக்கு மரங்கள் மீண்டும் வெட்டி சாய்ப்பு: போலீசார் குவிப்பு

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அடுத்த ஜேடர்பாளையம் கரப்பாளையம் பகுதியில், கடந்த மார்ச் 11ம் தேதி ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை எனக்கூறி வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ வைப்பு சம்பவங்கள் இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்டார்.

இதனையடுத்து கோவை மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சின்னமருதூரில் உள்ள பொத்தனூரை சேர்ந்த சவுந்தராஜனின் பாக்கு தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 1600க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அதே பாக்கு தோப்பில் மீதமிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பாக்கு மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு செடியை வெட்டி சேதப்படுத்தி, பத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் உள்ள விவசாய பம்பு செட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். தகவலறிந்து எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். பதற்றத்தை தணிக்க அங்கு எஸ்.பி, மற்றும் டிஐஜி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post பரமத்திவேலூர் அருகே தொடரும் பதற்றம் ஆயிரம் பாக்கு மரங்கள் மீண்டும் வெட்டி சாய்ப்பு: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Paramathivellur ,Karapalayam ,Namakkal district ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்