×

பரமத்திவேலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 1000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: தொடர் அசம்பாவிதங்களால் பதற்றம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி, இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும், சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து மார்ச் 14ம் தேதி ஜேடர்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஸ் (19) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆலை கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த 600க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. மேலும் டிராக்டர் மற்றும் பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு, வீடுகள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வந்தன. தொடர் அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து, 600 போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் சகஜநிலைக்கு திரும்பியது. இதனால் பாதிக்கும் மேற்பட்ட போலீசார் விலக்கிக்கொள்ளப்பட்டனர். அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் பரமத்திவேலூரைச் சேர்ந்த பொத்தானூரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான சின்னமருதூரில் உள்ள தோட்டத்திற்குள் மர்மநபர்கள் புகுந்து 1500 பாக்கு மரங்களை வெட்டி சாய்த்ததுடன், தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில் ஆகியோரது தோட்டத்தில் உள்ள பம்பு செட்குழாய்களை சேதப்படுத்தினர். இதையடுத்து தொடர்ந்து 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அசம்பாவிதம் தலை தூக்கியுள்ளது. ஏற்கனவே சவுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் வெட்டபட்ட பாக்கு மரங்கள் 1500 போக மீதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தது. நேற்று எஞ்சிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை மீண்டும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

மேலும் பெரியமருதுார் பகுதியில் ரமேஷ் என்பவரில் தோட்டத்தில் 20 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி குச்சிகளையும் வெட்டி வீசி சென்றுள்ளனர். பெரியமருதூர், சின்னமருதூர் பகுதிகளில் 10க்கும்மேற்பட்ட தோட்டங்களில் பம்புசெட் குழாய்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எஸ்பி ராஜேஸ்கண்ணா, டிஎஸ்பி ராஜமுரளி, சேலம் சரக டிஐஐி ராஜேஸ்வரி மற்றும் விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பரமத்திவேலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 1000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: தொடர் அசம்பாவிதங்களால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Namakkal District ,Paramathi Vellore ,Thaluka Jedarbalayam ,Paramativelur ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்