×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட காரிப்பட்டி மலைசாலை திட்டம் புத்துயிர் பெறுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு

போடி: போடி அருகே மேற்கு மலை தொடர்ச்சியில் கொட்டகுடி கிராம ஊராட்சியில் குரங்கணி, மேல் முட்டம், கீழ் முட்டம், நடு முட்டம், சென்ட்ரல் ஸ்டே ஷன், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், காரிப்பட்டி, கொம்பு தூக்கி அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு காபி, மிளகு, ஆரஞ்சு, ஏலம், இலவம், மா, பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. கொட்டக்குடி ஊராட்சி பகுதியில் காரிப்பட்டி கிராமம் கொம்பு தூக்கி அய்யனார் கோயில் பிரிவிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மலைசாலை மண்சாலையாகவும், கல்சாலையாகவும் இருப்பதால் மழை நேரங்களில் சகதிச் சாலையாக மாறும்.

எப்போதும் வாகனங்கள் செல்ல முடியாது மெயின் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி நடந்து தான் செல்ல முடியும். விவசாயிகள் உரம், மருந்து அரிசி, பருப்பு வகை உட்பட அனைத்து பொருட்களையும் தலைச்சுமையாகத்தான் எடுத்துச் செல்ல முடியும். அதேபோல் விளை பொருட்களையும் தொழிலாளர்கள் தலைச் சுமையாகவும், வாடகைக்கு கழுதை, குதிரைகள் பிடித்து எடுத்து வருவதும் வழக்கமாக உள்ளது. இதனால் காரிப்பட்டி விவசாயிகள் கடந்த திமுக ஆட்சியில் ஆறு கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்து மண் சாலையை தார் சாலை மாற்றி தர வேண் டும் என்ற கோரிக்கை வைத்தார்கள்.

அப்போது வனத்துறை இடையே 4 கிலோமீட்டர் சாலையாக செல்வ தால் அங்கு காடு வளர்ப்பு ஈட்டுத் தொகையாக 2 லட்சத்து 91 ஆயிரம், நிகர மதிப்பீட்டுத் தொகை 2 லட்சத்து 30 ஆயிரத்து 250 சேர்த்து 5 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசிற்கு செலுத்தி பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி நடந்து வந்த நிலையில் விவசாயிகள் மேலும் வலியுறுத்தி சாலைப் பணிகள் நிறைவேற்றி தர வேண்டும் என போடி தொகுதி எம்.எல்.ஏவும், துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடமும் விவசாயிகள் விவசாய சங்கத்தின் மூலம் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அங்கிருந்து அனுமதி கிடைக்கவில்லை பணிகள் செய்வதற்கு ஒத்துழைப்பு எதுவும் தரவில்லை ஆறு கிலோ மீட்டர் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மறுபடியும் திமுக ஆட்சி பொறுப் பேற்றிருப்பதால் விவசாயிகள் பொது மக்களின் நலன் கருதி உணவு உற்பத்தியை முறையாக பெருக்குவதற்கு இந்த மண் சாலையை புதுப்பித்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆக்கா கமிட்டி குழு உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை தேனி கலெக்டர் அலுவலகத்தில் இந்த காரிப்பட்டி சாலை பணிகள் உட்பட பல திட்ட பணிகளுக்கு ஆலோசனை கூட்டமாக நடப்பதால், அந்த கூட்டத்தில் இந்த காரிப்பட்டி மண் சாலை ஏற்கனவே திமுக ஆட்சி அனுமதி இருப்பதால் அதை அப்படியே நிறைவேற்றி தர அதிகாரிகள் முடிவெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட காரிப்பட்டி மலைசாலை திட்டம் புத்துயிர் பெறுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kharipatti ,Bodi ,Kotakudi ,Upper Mutam ,Lower Muttam ,Midu ,Kirapatti ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது