×

உச்சத்தில் தக்காளி, வெங்காயம் விலை.. பாதாளத்தை நோக்கி தேங்காய் விலை தென்னை விவசாயத்திற்கு தெம்பு கொடுக்க வேண்டும்: விலை நிர்ணயம், மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அவசியம்

* அரசுக்கு கம்பம் விவசாயிகள் கோரிக்கை

தேவாரம்: கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை விவசாயத்தை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில், கூடலூர், கம்பம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், வீரபாண்டி, மார்க்கயன் கோட்டை, என திரும்பிய இடமெல்லாம் தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கிறது. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு, அடுத்தபடியாக கம்பம் பள்ளதாக்கு தென்னையில் முன்னணி பெற்று வருகிறது.

இங்கு விளையும் தேங்காய் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக தேங்காய் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவை தவிர தேங்காய் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் விவசாயத்தை பொறுத்தவரை தேனி மாவட்டம் என்றென்றும் உற்பத்தியில் முன்னணி இடத்தை பிடிக்க செல்கிறது. இதனால் தென்னை விவசாயத்தை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான விவசாயக் கூலி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. தென்னை மரம் ஏறுவதற்கும், தேங்காய் உரிப்பதற்கும், தேங்காய் விவசாயத்தை பராமரிப்பதற்கு என்றே கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் மாவட்டத்தில் உள்ளனர். சென்னை விவசாயத்தின் மதிப்பு கூட்டு பொருளாக தேங்காயில் இருந்து பெறப்படும் நார், கயிறு உற்பத்திக்கும், இதேபோல் இதன் மட்டை விளக்குமாறு உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை நம்பியும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதனால் தேனி மாவட்டத்தில் தென்னை மரங்கள் எங்கெல்லாம் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் தொழிலாளர் குடும்பங்களும் விவசாயிகளும் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால் தற்போது தேங்காய்க்கு உரிய விலையில்லாமல் விவசாயிகள் ஏங்கி தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக ஒரு காலத்தில் தென்னந்தோப்பில், தேங்காய் வெட்டும்போது ஒரு காய் ரூ.15 முதல் 20 வரை விலைபோன காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது தேங்காய் தற்போது 7 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. இதனால் தென்னை விவசாயத்தை நம்பி உள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. உரித்த மொட்டை காய் ஒரு டன் ரூ.17 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரத்தி 500 வரைவிலை போகிறது. இதன்மூலம் எண்ணெய் உற்பத்திக்கு தேங்காய் செல்கிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு டன் 22 ஆயிரம் வரை விலை போனது. இதனால் விவசாயிகளுக்கு அதிகமான எதிர்பார்த்த விலை கிடைப்பது இல்லை. ஒரு காலத்தில் தென்னை விவசாயம் செய்தால் மிகவும் அதிகமான லாபம் கிடைக்கும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது. இதுபோல் தென்னை மரம் ஏறுவதற்கு இருந்த நிலை மாறி இப்போது மாற்று வேலைகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தென்னை விவசாயிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு காலத்தில் தென்னை விவசாயம் அதன் சார்ந்த உப தொழில்கள் மிக உச்சத்தில் இருந்தன. ஆனால் இன்று மிகவும் கீழான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தேங்காய்க்கு விலை கிடைப்பதில்லை. ஒரே ஆறுதல் கோடைகாலங்களில் இளநீர்க்கு விலை கிடைக்கும். ஆனால் எல்லா மரங்களிலும் இளநீர் கிடைக்காது. கொப்பரைக்கு அனுப்பினாலும் அங்கும் விலை இல்லை. பல வருடங்கள் வளர்த்து தண்ணீர் கட்டி, உரம் வைத்து பார்த்த தென்னைக்கு, இதன் முக்கிய உற்பத்தியான தேங்காய்க்கு விலை கிடைக்காமல் போனது பெரும் பின்னடைவாகும். இதன் உப தொழிலான தென்னை நாருக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் தேங்காய் மட்டையையை வாங்கிட ஆள் இல்லை. தமிழக அரசு தென்னை விவசாயத்தை ஊக்குவிப்பதற்குரிய நடவடிக்கையை எடுப்பதுடன், தமிழக அரசே தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

* விலை நிர்ணயம்

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மானிய விலையில் உரம், பூச்சி மருந்து, தென்னை ஊக்குவிப்பு மருந்துகள் என விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்காய் விவசாயம் கொஞ்சம்….கொஞ்சமாக அழிந்துவிடும். தென்னை நல வாரியத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய எந்தவித நன்மைகளும் இம்மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை. குறிப்பாக தென்னை விவசாயம் அதிகரிப்பது குறித்து எந்தவித ஆலோசனையும் கேட்கப்படாத நிலையும் தொடர்கிறது. இதனால் தென்னை விவசாயம் மிகவும் நலிவடைந்த நிலையை நோக்கி செல்கிறது. எனவே மீண்டும் சென்னை விவசாயத்தை ஊக்குவிப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து அதிகாரிகள் மீண்டும் ஈடுபடுவது அவசியம். தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்க வேண்டும்.

* மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள்

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை தென்னை விவசாயம் பல்லாயிரம் ஏக்கரில் நடந்தும், இதற்கான மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் என எதுவும் இல்லை. தென்னையில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருள்கள் உருவாகிறது. ஏற்கனவே இருந்த கயிறு மில்கள் மூடப்பட்டு விட்டன. விளக்குமார் தொழிற்சாலைகள் அதிக அளவில் இல்லை. தேங்காய்க்கு விலை இல்லாததால் கொப்பரை சார்ந்த தொழில்கள் எதுவும் இல்லை. தென்னையின் உபதொழில்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் தென்னை விவசாயம் மிகவும் நலிவடைந்து செல்கிறது. தேங்காய்க்கு உரியவிலை இல்லாத நிலையில் விவசாயிகள் மிகப்பெரும் நஷ்டத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இதற்கு முன் வந்து தேனி மாவட்டத்தில் தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் நிறுவிட வேண்டும் தேனி மாவட்டத்தில் விலையும் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்தால் சிறப்பாக இருக்கும்.

* அழிவை நோக்கி தென்னை மரங்கள்

தேனி மாவட்டத்தில் பல ஊர்களில் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மற்றொருபுறம் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு மாற்று வவசாயமாக வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் காய்கறி விவசாயம் செய்யப்படும் நிலையும் உள்ளது. இதனை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தென்னை மரங்கள் இம் மாவட்டத்தை விட்டே அழியும் நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுத்து தென்னை மரத்தை காப்பதற்குரிய தேவைகளில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, மற்றும் தென்னை நல வாரிய அதிகாரிகள் ஈடுபடுவது மிகவும் அவசியம்.

The post உச்சத்தில் தக்காளி, வெங்காயம் விலை.. பாதாளத்தை நோக்கி தேங்காய் விலை தென்னை விவசாயத்திற்கு தெம்பு கொடுக்க வேண்டும்: விலை நிர்ணயம், மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Gampam ,Tamil Nadu government ,Kampam Valley ,
× RELATED எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய்...