×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; பாபநாசம், சேர்வலாறு அணைகள்: நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு

நெல்ைல: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீரிருப்பு மேலும் 4 அடி உயர்ந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3141 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பாபநாசம் அணை நீரிருப்பு 59.65 அடியாக இருந்தது. இது நேற்று காலை 64.70 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 141 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 454 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை பகுதியில் 4 மிமீ மழை பெய்துள்ளது. இதுபோல் சேர்வலாறு அணை நீரிருப்பு 92.19 அடியில் இருந்து 96.75 அடியாக உயர்ந்துள்ளது. அணை பகுதியில் 7 மிமீ மழை பெய்துள்ளது.

அணைகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றும் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் நீரிருப்பு மேலும் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக சேர்வலாறு அணை நீரிருப்பு சதமடிக்க வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் மற்றொரு பெரிய அணையான மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 133 கனஅடி நீர் வருகிறது. 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் சிறிய அணையான குண்டாறு அணை ஏற்கனவே அதன் கொள்ளளவான 36.10 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 67 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கடனா அணைப் பகுதியில் 10 மிமீ மழை பெய்தது. அடவிநயினார் அணைப் பகுதியில் 40 மிமீ மழை பதிவாகி உள்ளது. ராமநதி 7.2, குண்டாறு 19.4, கருப்பாநதி 2. செங்கோட்டை 4.8 மிமீ, தென்காசி 4 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக் குறிச்சி பகுதியில் நேற்று காலை மழை பெய்தது. தென்காசி மாவட்டம் பண்பொழி, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; பாபநாசம், சேர்வலாறு அணைகள்: நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Papanasam, ,Chervalar Dams ,Nellaila ,Nellai ,Papanasam ,Servalaru ,Chervalar ,Dinakaran ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...