×

குற்றாலத்தில் சீசன் களை கட்டியது சுற்றுலா பயணிகள் அலைமோதல்: அனைத்து அருவிகளும் ஆர்ப்பரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்ததால் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் ஜூலை மாதம் துவங்கியது முதலே சீசன் களை கட்டி காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் பெய்தது. நேற்று காலை வேளையிலும் சாரல் தூறியது. மதியத்திற்கு பிறகு சாரல் இல்லை. மிதமான வெயில் காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேக கூட்டம் திரண்டு காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.

விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் ஏராளமான வாகனங்களில் வெளியூர்களில் இருந்து அணிவகுத்து வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த போதும் அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுந்ததால் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர். இந்த சீசனில் முதன் முறையாக நேற்றைய விடுமுறை தினத்தின் போது தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்பி சாம்சன் நேற்று குற்றாலம் மற்றும் அருவி பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண் போலீசார் பற்றாக்குறை?.. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூட ஆண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெண் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் பெண்கள் பலர் குளிக்க தயங்கினர். எனவே பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் காவலர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குற்றாலத்தில் சீசன் களை கட்டியது சுற்றுலா பயணிகள் அலைமோதல்: அனைத்து அருவிகளும் ஆர்ப்பரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kurdalam ,Tenkasi ,Courtalam ,Dinakaran ,
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!