×

திருமருகல் அருகே புத்தாற்றில் கரை உடைப்பை தடுக்க சுவர் அமைக்க வேண்டும்

நாகப்பட்டினம்,ஜூலை9: திருமருகல் அருகே கீழப்பூதனூர் புத்தாற்றில் கரை உடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே கீழப்பூதனூரில் புத்தாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டது. அப்போது தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு கரைகள் கட்டப்பட்டது. ஆனால் பாலம் அருகில் காரையோரம் தடுப்பு சுவர் பாதிவரை மட்டும் அமைக்கப்பட்டது. இதனால் புத்தாற்றின் கரை சேதமடைந்து ஆற்றுக்குள் சரிந்து விழுந்து வருகிறது. இவ்வாறு கரை உடைந்து விழுவதால் இயற்கை பேரிடர் காலங்களில் வெள்ள நீர் வயல்களில் சூழ்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. இந்த பகுதி இயற்கை பேரிடர் காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் தாழ்வான பகுதியாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கீழபூதனூர் புத்தாற்றின் கரை முழுமையாக கட்டாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் இயற்கை பேரிடர் காலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வீடுகள் சேதம் அடைவது வாடிக்கையாகி விட்டது. இந்த பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் மழை காலங்களில் அடிக்கடி இப்பகுதியில் உள்ள வயல்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் சூழ்ந்து பாதிப்படைகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் உள்ளோம். மேலும் மழை காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கூறினர்.

The post திருமருகல் அருகே புத்தாற்றில் கரை உடைப்பை தடுக்க சுவர் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirumarukal ,Nagapattinam ,Geezabudanur ,Thirumarukal ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்