×

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டெடுப்பு: மாதிரிகள் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டது

வந்தவாசி, ஜூலை 9: வந்தவாசி அருகே நடந்த அகழாய்வு பணியின்போது தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் சுடுமண் ஈம பேழைகள் கண்டெடுக்கப்பட்டது. இவை 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெருமக்கள் பயன்படுத்தியது என்று ஆய்வில் தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்தில் உள்ள வடமேற்கு பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற் கால இடுகாடு இருப்பதும், இதில் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரையிலான 200க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த கல் வட்டங்களில் பெருங்கற்கால மனிதர்களின் ஈம பேழைகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இந்த பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குனர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வு பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. 14 தொழிலாளர்களை கொண்டு முதல் கட்டமாக இரண்டு வட்டங்களில் குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர்.

பின்னர் படிப்படியாக தற்பொழுது 11 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் கட்டமாக 20க்கும் மேற்பட்ட ஈம பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு மற்றும் கருப்பு, சிவப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டெடுக்கப்பட்டது. இந்த ஈமபேழைகள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சுடுமண்ணால் 12 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஈம பேழைகள் தமிழர்களின் பண் பாட்டை குறிக்கும் வகையில் உள்ளன. பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பின்னர் தான் இதில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தொல்லியியல் துறையினர் அந்த பானை ஓடுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த அகழாய்வின்போது கிடைக்க பெற்ற பொருட்களின் மாதிரிகள் மாநில தொல்லியல் துறை இயக்குனரின் ஆய்வுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டெடுப்பு: மாதிரிகள் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Samples ,Vandavasi ,Vandavasi.… ,Archeology Department ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை