×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி பிரமோற்சவ விழா. தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நேற்று விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி, கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில், காலை 6.30 மணி அளவில் திருமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கினர்.

அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர். ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, வரும் 17ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும், தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி திருவீதியுலா நடைபெறும். கொடியேற்ற விழாவில், அறங்காவலர் குழு தலைவர் டிஎஸ்ஆர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ani Pramotsava ceremony ,Tiruvannamalai ,Annamalaiyar ,Temple ,Swami ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.23 கோடி, 365 கிராம் தங்கம் காணிக்கை