×

திருமணமாகாத ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பல லட்சம் பறித்த பலே கில்லாடி பெண் கைது: லேப்டாப், 3 செல்போன், 6 சிம் கார்டுகள் பறிமுதல்

சென்னை, ஜூலை 9: திருமணமாகாத ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் குறிவைத்து, ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்தவர் அசோக் சைதன்யா (33). இவர், ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் தங்கி, தனியார் கால் சென்டரில் பணிபுரிகிறார். இவருக்கு 33 வயதாகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு மேட்ரிமோனியல் வளைதளத்தில் பதிவு செய்து, திருமணத்திற்கு வரண் தேடி வந்தார். அப்போது, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வெங்கடரமணா என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா (33), மேட்ரிமோனியல் பதிவு மூலம் அறிமுகம் ஆனார்.

அப்போது, திருமணம் தொடர்பாக இருவரும் பேசினர். அப்போது, சந்தியாவின் புகைப்படத்தை பார்த்து, அசோக் சைதன்யா மயங்கியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்ய சந்தியா விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அசோக் சைதன்யாவும், ஷ்ரவண சந்தியாவும் தங்களது வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து, மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். பின்னர், இருவரும் தங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர். இதனால், ஷ்ரவண சந்தியாவின் அழகில் மயங்கிய அசோக் சைதன்யா, ஷ்ரவண சந்தியா கேட்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக தொடர்ந்து சுமார் ₹9 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.

மேலும், ₹65,000 மதிப்புள்ள செல்போனை புதிதாக வாங்கி, ஷ்ரவண சந்தியா சொன்ன முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், அசோக் சைதன்யா திருமணத்தை பற்றி பேசிய போதெல்லாம் ஷ்ரவண சந்தியா, தவிர்த்து வரவே, சந்தேகமடைந்த அசோக், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, அசோக் சைதன்யா அனுப்பி இருந்த அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி, உன்னை அசிங்கபடுத்தி விடுவேன், என ஷ்ரவண சந்தியா மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அசோக் சைதன்யாவின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் சைதன்யா, இதுபற்றி ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 19ம் தேதி புகார் அளித்தார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழிக் குற்றப்பிரிவு போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அதில், ஷ்ரவண சந்தியா செல்போன் சிக்னல் மூலமாக பெங்களுரு மடிவாலா பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவரை, இணைய வழிக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை, சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஷ்ரவண சந்தியா தெலுங்கு மேட்ரிமோனியின் மூலம் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து, தனது வலையில் விழவைத்து, அவர்களிடம் கொஞ்சி, கொஞ்சி பேசி, அதன் மூலம் பணம் பறிப்பதும், அந்த பணத்தை கொண்டு ஷ்ரவண சந்தியா உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிந்தது.

இதுபோல் பல ஆண்களை ஏமாற்றி பழகி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் ஷ்ரவண சந்தியா என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வெளியிட்டது அவர் படம் இல்லை என்பதும், அழகான பெண்களின் படங்களை தேர்வு செய்து, அதை பதிவிட்டு, ஆண்களை மயக்கி, அதன்மூலம் பல லட்சம் பறித்ததும் தெரியவந்தது. பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஷ்ரவண சந்தியா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் 3 செல்போன்கள் 6 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தரங்க படங்கள்
ஹனி ட்ரிப்க்காக ஷ்ரவண சந்தியா 8 மின் அஞ்சல் மற்றும் டெலிகிராம் ஆப்பையும் பயன்படுத்தியுள்ளார். ஷ்ரவண சந்தியா, மேட்டரி மோனியலில் 30 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களை வலைவிரிப்பது வழக்கம், மேலும் அந்த ஆணின் செல்போன் எண்ணை எடுத்து வாட்ஸ்அப்பில் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவது, இரவும், பகலும் காதல் சொட்ட சொட்ட பேசி மயக்கி பணம் பறிப்பது இவரது வழக்கம். இவரது வலையில் பல ஆண்கள் சிக்கி பணத்தை இழந்திருக்காலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

The post திருமணமாகாத ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பல லட்சம் பறித்த பலே கில்லாடி பெண் கைது: லேப்டாப், 3 செல்போன், 6 சிம் கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bale Killadi ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...