×

புளியந்தோப்பு, மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

மாதவரம், ஜூலை 9: மாதவரம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டையில் காவல்துறை சார்பில் நடந்த குறைதீர் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக, காவல்துறை துணை ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் துணை ஆணையர்கள் நேரில் பொதுமக்களின் மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டனர். அந்த வகையில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட எம்கேபி நகர் சரகம், செம்பியம் சரகம், புளியந்தோப்பு சரகம் என 3 சரகத்திற்குட்பட்ட 9 காவல் நிலையங்கள் மற்றும் 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்திற்கும் சேர்த்து வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குறைதீர் முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் 12 காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் தனித்தனியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, புகார் தாரர்கள் மற்றும் எதிர் தரப்பினரை வரவழைத்து பேசினர். இன்ஸ்பெக்டர்களால், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் உதவிக் கமிஷனரிடம் சென்று இறுதியாக துணை கமிஷனர் அதற்கு தீர்வு கண்டார். அதேபோல், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் நடைந்த நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன், அழகேசன், செம்பேடு பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தனர். இதில் புளியந்தோப்பு சரக்கத்தில் மட்டும் 41 புகார்கள் பெறப்பட்டு, அதில் 40 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதேபோன்று எம்கேபி நகர் சரக்கத்தில 47 புகார்கள் பெறப்பட்டு, அதில் 42 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோன்று செம்பியம் சரகத்தில 51 புகார்கள் பெறப்பட்டு, 35 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 139 புகார்களுக்கு, 300க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 117 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 22 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

 கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான குறைதீர் முகாம், மாதவரம் மேம்பாலம் அருகே நேற்று நடைபெற்றது. மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் எம்.மனோகரன் முகாமை தொடங்கி வைத்தார். துணை ஆணையர் சக்திவேல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் ஆதிமூலம் அனைவரையும் வரவேற்றார். இதில், மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரவள்ளூர், புழல், ஐ.சிஎப் ஆகிய 6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 300க்கும் மேற்பட்ட புகார்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.
 வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான குறைதீர் முகாம், புதுவண்ணாரப்பேட்டை காவலர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி இதில் தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் முகமது நாசர், இருதயம், மகேந்திரன், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள் தவமணி, யமுனா, ராஜன், முருகானந்தம், யுவராஜ், ரவி, புசைதுரை, சூசை ராஜ், காதர் மீரான், கோபி, மாரியப்பன், அருட் செல்வம், ராஜேஷ், சிதம்பர பாரதி மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு ஏற்கனவே காவல்துறை சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் ஏராளமான பொதுமக்கள் இதில் தங்கள் புகார்களை தெரிவித்தனர். இதில், பல புகார்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. சில புரார்களுக்கு சிஎஸ்ஆர் போடப்பட்டது.

The post புளியந்தோப்பு, மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Grievance ,Pulianthoppu ,Madhavaram ,Puduvannarappet ,Grievance Camp ,Chennai Metropolis ,People's Grievance Camp ,Puliantoppu ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி