×

பஞ்., அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

நல்லம்பள்ளி, ஜூலை 9:மானியதஅள்ளியில் பட்டா நிலத்திலுள்ள கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடை உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தில், 4 ரோடுகள் சந்திக்கும் சாலை மற்றும் ஜருகு சந்தைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், பேக்கரி, ஜவுளிக்கடைகள் மற்றும் ஓட்டல்கள், டீக்கடைகள் அதிகளவில் உள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள பெரும்பாலான கடைகள், சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் அமைத்துள்ளதால், ஜருகு 4 ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் சென்றதால், ஊராட்சி நிர்வாகம் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் கொண்டு, அகற்றும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதை நிறுத்தக்கோரி, மானியதஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், கடை உரிமையாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த நல்லம்பள்ளி பிடிஓ லோகநாதன் மற்றும் போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணிநேர பேச்சு வார்த்தைக்கு பின், பட்டா நிலத்தில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி அளித்த பின், தர்ணா போராட்டத்தை கைவிட்டு கடை உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பஞ்., அலுவலகத்தில் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharna ,Panj ,Nallampally ,Panchayat ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா