×

காவல்துறை உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி: ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி தகவல்

மதுரை: காவல் துறை உயரதிகாரிகளின் மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் தேனி வந்த டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று காலை மதுரை எஸ்பி அலுவலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் டிஜிபி பேசியதாவது : காவல்துறையினர் மன அழுத்தம் இல்லாமல் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் – காவல்துறையினர் நட்புறவை பேணிக்காத்தல் மிகவும் அவசியம்.

உரிய காரணங்களோடு விடுமுறை கேட்டு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யும் நபர்கள், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மன அழுத்தம் உள்ள போலீசார் அதிகாரிகள், நண்பர்கள், குடும்ப மருத்துவர்களிடம் கூறி மன அழுத்தத்தை போக்க வேண்டும். அதிகாரிகள் அளவில் மன அழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி, மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூடுதல் டிஜிபி அருண் ஆலோசனை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீசார், அதிகாரிகளுக்கு மன அழுத்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பணிச்சுமை குறைக்கும் வகையிலான திட்டங்கள் அமலாக்க வேண்டும், போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் வார விடுப்பு வழங்க வேண்டும். போலீசார் பல்வேறு குடும்ப விழா, விசேங்களுக்கு சென்று வர விடுப்பு கிடைப்பதில்லை. பல்வேறு நெருக்கடி சூழலில் மன அழுத்த பிரச்னைகளுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது.

உடல் நலன், மன நலனில் கவனம் செலுத்த முடியாத நிலைமை இருக்கிறது. இதுகுறித்து கவுன்சலிங் அளிக்க வேண்டும். சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று மன அழுத்தமும் இயற்கையாக இருக்கிறது. போலீசாரின் புகார்களை ஒதுக்கி தள்ளாமல் அதை தீர்த்து வைக்க வேண்டும். மனநல மருத்துவர்கள் மூலம் கேள்விகளை தயார் செய்து அதனை போலீசாரிடம் கொடுத்து அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?, என கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. டாக்டர்கள் மூலமாக போலீசாருக்கு சிகிச்சை அளித்து மன அழுத்தத்தில் இருந்து மீள வைக்க முடியும். மன அழுத்த பாதிப்பில் உள்ள போலீசார், சிகிச்சை பெறுபவர்கள், குடும்பம், பணி சூழலில் மன அழுத்த பாதிப்பில் இருப்பவர்கள் விவரங்கள் சேகரிக்கவும் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

வதந்தி பரப்பாதீங்க…
தமிழக கூடுதல் டிஜிபி அருண், இதைத்தொடர்ந்து, கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், சமூக வலைதளங்களில் விஜயகுமார் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

The post காவல்துறை உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி: ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Madurai ,Shankar Jiwal ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...