×

திருவருளை பெற்று தரும் குரு அருள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம் குருமார்களை நாம் கொண்டாட வேண்டிய முக்கியமான நாள். குருவின் அருள் எனும் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே நம்மால் கடவுளின் அருளை பெற முடியும். எத்தனை பூஜைகள் செய்தாலும் சரி, எத்தனை கடுமையான விரதங்களை நாம் மேற்கொண்டாலும் சரி, குருவின் பரிபூரணமான ஆசிக்கு நாம் பாத்திரமாகும் போதுதான் இறைவனின் பரிபூரணமான ஆசிக்கு நாம் பாத்திரமாவோம் என்பதை பல கதைகளின் வழியில் நம் புராணங்களும் இதிகாசங்களும் எடுத்துரைக்கின்றது. பாண்டுரங்க விட்டலனும் இதை காட்டி கொடுத்திருக்கிறார். மேல் கோட்டையில் திரு நாராயணப் பெருமாளும், குருஅருளின் சிறப்பை பற்றி, குருவின் திருவடியை நாம் நாட வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றி காட்டி கொடுத்திருக்கிறார்.

பாண்டுரங்கன், குருவின் திருவடியில் சரணடைந்தால் மட்டுமே ஒருவன் பக்குவப்பட்டு, என் சரணத்தை அடைய முடியும் என அழகாய், நாமதேவரின் வழி நமக்கெல்லாம் காட்டி கொடுத்திருக்கிறார். தம் சிறு வயது முதலே விட்டலனோடு சரி சமமாக பேசி, விளையாடி விட்டலனின் உயிர்த்தோழன் போல் இருந்தவர் நாமதேவர். ஒரு ஆஷாட சுக்ல ஏகாதசி நன்னாளில், பல பாண்டுரங்க பக்தர்களோடு, நாமதேவரும் விட்டலனின் பரமபக்தரான கோராகும்பர் வீட்டிற்கு செல்ல, அவரோ ஒவ்வொருவரின் தலையைத்தட்டி பார்த்து இது பக்குவப்பட்ட பானை, பக்குவப்படாத பானை என சொல்லிக் கொண்டு நாமதேவரின் தலையைத் தட்டி பார்த்து இது பக்குவப்படாத பானை என கூறிவிட்டார்.

தன்னை கோர கும்பர் பக்குவப்படாத பானை என குறிப்பிட்டதை பொறுக்கமுடியாத நாம தேவர், நேராக விட்டலனிடம் சென்று முறையிட, விட்டலனோ, “நாமதேவா, எனக்கு மிகவும் பிரியமானவன்தான் நீ.. அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், நீ இன்னும் பக்குவப்படணும். குரு இல்லாதவன் பக்குவப்படாதவன் தானே? ஒரு குரு மூலமாக என்னை வந்து நீ இன்னும் அடைய வில்லையே? பக்குவத்தை போதிக்கக் கூடியவர் குரு தானே? போ… முதலில் ஒரு நல்ல குருவை தேடி பிடி. அந்த குருவின் திருவடியில், எப்போது நீ உன்னை முழுமையாக ஒப்படைக்கிறாயோ, அன்றுதான் நீ பக்குவப்பட்டவனாக மாறி விடுவாய்.” என்றார் பாண்டுரங்க விட்டலன்.

ஆக, ஒரு குருவை நாடி நாம் சென்றடையாமல் இருக்கும்வரை, நாம் அனைவருமே பக்குவப்படாதவர்கள் தானே? குரு அருள் இருந்தால்தான், திரு அருள் கிடைக்கும் என்பதை இறைவனே சொல்லி இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதையை பார்ப்போம். மேல்கோட்டை எனும் இடத்தில், ஏழிசை எம்பிரான் எனும் பாடகர் வாழ்ந்து வந்தார். அவர் பாடும் பாடலைக் கேட்டு மேல்கோட்டையின் கோயிலில் குடி கொண்டிருக்கும் செல்லப் பிள்ளையான சம்பத்குமாரே நடனம் ஆடுவாராம். அவ்வளவு அற்புதமாக பாடக் கூடியவர் ஏழிசை எம்பிரான்.

ஸ்வாமி ராமானுஜர், தம் சிஷ்யர்களோடு மேல்கோட்டையில் ஒருசில காலம் தங்கி இருந்த சமயம் அது. ஏழிசை எம்பிரான் ஸ்வாமி, ராமானுஜரை ஏனோ கொஞ்சமும் மதிக்காமல் அலட்சியப்படுத்திக்கொண்டு இருந்தார். இதை ஸ்வாமி ராமானுஜர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரது சிஷ்யர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ராமானுஜரின் சிஷ்யர்களில் ஒருவரான நடதூர் அம்மான், நேராக ஏழிசை எம்பிரானிடம் சென்று, “எங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம். அதை நீங்கள்தான் அந்த நாராயணப் பெருமாளிடம் கேட்டு தீர்த்துவைக்க வேண்டும்’’ என்றார். அதற்கு, ஏழிசை எம்பிரானோ கண் ஜாடையாக கூறுங்கள் என்றார்.

“பெருமாளிடம், எங்கள் குருவான ஸ்வாமி ராமானுஜருக்கு, மோட்சம் உண்டா இல்லையா? என கேட்டு விடை பெற்றுத் தாருங்கள்’’ என பவ்யமாக கேட்டபடி நிற்க, பெருமை தாங்காமல் ஏழிசை எம்பிரானும் அதை பெருமாளிடம் கேட்க, அதற்கு பெருமாளோ, “ராமானுஜருக்கு மட்டும் அல்ல அவரைச் சேர்ந்த, அவரின் திருவடியில் சரண் புகுந்த அனைவருக்கும் மோட்சம் நிச்சயம் உண்டு” என்று விடை அளிக்க, அதையே ஏழிசை எம்பிரானும் ராமானுஜரின் சிஷ்யர்களிடம் தெரிவித்தார்.

உடனே சிஷ்யர்கள் ஏழிசை எம்பிரானிடம், “எங்களுக்கு இன்னொரு சந்தேகம். உங்களுக்கு மோட்சம் உண்டா என்று பெருமாளிடம் கேட்டு எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று கை கட்டி வாய் பொத்தி கேட்க, அதற்கு ஏழிசை எம்பிரானோ, “எனக்கு எப்படி மோட்சம் கிடைக்காமல் போகும்? நான் பாடினால் பகவானே ஆடுகிறார். அப்படி இருக்கும்போது அவர் எனக்கு மோட்சம் தராமல் போய்விடுவாரா என்ன?’’ என்று எண்ணியவாறே பகவானிடம் அதையே கேட்க, பெருமாளோ, “நீ கேட்ட கேள்விக்கு நான் முதலிலேயே பதில் சொல்லிவிட்டேனே.

ராமானுஜரின் திருவடி சம்பந்தம் பெற்றவர்களுக்கு மோட்சம் உண்டு என்று சொன்னேன். நீயோ, ராமானுஜன் எனும் மிகப் பெரிய குருவின் திருவடித் தாமரையை தொழாதவன். அப்படி இருக்கும் போது, உனக்கு எப்படி மோட்சம் கிடைக்கும்? நீ பாடினாய் நான் ஆடினேன் அவ்வளவுதான். குரு மூலமாக வந்தால் மட்டுமே ஒருவனுக்கு மோட்சம் கிடைக்கும். குருவை தொழாமல் என்னை தொழுவதால், ஒருவனுக்கு மோட்சம் என்பது கிடைக்காது. குருபக்தி செய்து விட்டு, அதன்பின், என் மீது பக்தி செய்” என்று வாக்களித்தார் பெருமாள் மேல்கோட்டையில். பகவானைவிட ஒரு படி மேலானவர் குரு, என்பது பகவானின் வாக்கு. குரு பெளர்ணமி (ஜூலை 3) நன்னாளில் குருவை வணங்குவோம். அவரது திருவடித் தாமரையில் சரண் புகுவோம், அதன் வழியே பகவானை அடைவோம்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

The post திருவருளை பெற்று தரும் குரு அருள் appeared first on Dinakaran.

Tags : Grace ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...